பெங்களூருவில் மழை பாதிப்புக்கு காரணமான ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மாநகராட்சி தோல்வி; கர்நாடக ஐகோர்ட்டு அதிருப்தி
பெங்களூருவில் மழை பாதிப்புக்கு காரணமான ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மாநகராட்சி தோல்வி அடைந்திருப்பதாக கர்நாடக ஐகோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது.
பெங்களூரு:
மாநகராட்சி தோல்வி
பெங்களூருவில் உள்ள ஏரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பது தொடர்பாகவும், ஏரிகளை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனுக்கள் மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி (பொறுப்பு) அலோக் ஆராதே முன்னிலையில் நடைபெற்றது. அப்போது ஏரிகள், ராஜ கால்வாய்கள் ஆக்கிரமிப்பால் பெங்களூருவில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பு குறித்தும் விசாரிக்க வக்கீல் மோகன் இடைக்கால மனுவும் தாக்கல் செய்தார்.
அப்போது பெங்களூரு மழை பாதிப்புகள் குறித்த புகைப்படங்களையும் அவர் வழங்கி இருந்தார். அந்த மனுவையும் நீதிபதி விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார். அப்போது நீதிபதி கூறுகையில், பெங்களூருவில் ராஜகால்வாய், ஏரி நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி கோர்ட்டு பல முறை உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மாநகராட்சி தோல்வி அடைந்து விட்டது.
உத்தரவை பின்பற்றுவதில்லை
2010-ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ந் தேதியே பெங்களூருவில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி அரசுக்கும், மாநகராட்சிக்கும் ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவை செயல்படுத்தி இருந்தால் பெங்களூருவில் மழை பாதிப்பு ஏற்பட்டு இருக்காது. ஐகோர்ட்டின் உத்தரவுகளை அரசும், மாநகராட்சியும் பின்பற்றுவதில்லை. பெங்களூருவில் மழை பாதிப்பு ஏற்பட காரணமாக இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் தங்களது கடமையை செய்ய தவறி இருக்கிறார்கள் என்று நீதிபதி அலோக் ஆராதே அதிருப்தி தெரிவித்தார்.
மேலும் பெங்களூருவில் ஏரிகளை ஆக்கிரமிப்பு செய்திருக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி கூறினர். இந்த மனுக்கள் மீதான விசாரணையை அடுத்த மாதம் (அக்டோபர்) 10-ந் தேதிக்கு தலைமை நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.