உ.பி.யில் பைசாபாத் கன்டோன்மென்ட் ரெயில் நிலையத்தின் பெயரை மாற்ற பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்!
உத்தரப்பிரதேச மாநிலம் பைசாபாத் கன்டோன்மென்ட் ரெயில் நிலையத்தின் பெயரை மாற்ற பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி,
உத்தரப்பிரதேச மாநிலம் பைசாபாத் கன்டோன்மென்ட் ரெயில்வே நிலையத்தின் பெயரை மாற்றும் திட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
அக்டோபர் 2021இல், பைசாபாத் ரெயில்வே ஜங்ஷனின் பெயர் மாற்றப்படும் என்று உத்தரப்பிரதேச அரசு அறிவித்தது. இந்த பெயர் மாற்றத்துக்கு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஒப்புதல் அளித்து இருந்தார்.
இந்நிலையில், உத்தரப்பிரதேச அரசின் திட்டத்துக்கு பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.பைசாபாத் கன்டோன்மென்ட்டை, அயோத்தி கன்டோன்மென்ட் என பெயர் மாற்றப்படும்.
முன்னதாக நவம்பர் 2018இல், உத்தரப்பிரதேச அரசு பைசாபாத் மாவட்டத்தின் பெயரை அயோத்தி என மாற்றியது. அலகாபாத்தின் பெயரை பிரயாக்ராஜ் என்று மாற்றியது. இந்த பெயர் மாற்றத்துக்கு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஒப்புதல் அளித்து இருந்தார்.
ஜூன் 2018இல் முகல்சராய் ரெயில் நிலையத்துக்கு, ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதியான தீன் தயாள் உபாத்யாயின் பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.