மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுமி சாவு
மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுமி பலியானார்.
பெலகாவி: கர்நாடக மாநிலம் பெலகாவி டவுனில் வீரபத்ரேஸ்வரா நகரில் தாயுடன் வசித்து வந்த சிறுமி வித்யாஸ்ரீ ஹெக்டே (வயது 10). இவர்களது பூர்வீகம் உடுப்பி மாவட்டம் ஆகும். சிறுமிக்கு தந்தை இல்லை. தாய் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிறுமி தனது வீட்டு மாடியில் பூந்தொட்டியில் வைத்திருந்த பூவை பறிக்க முயன்றாள். அப்போது கால் தவறி மாடியில் இருந்து தரையில் விழுந்த சிறுமி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினாள்.
ஆனால் மருத்துவ சிகிச்சை செலவுக்கு பணம் இல்லாமல் அவளது தாய் பரிதவித்தார். உடனே அப்பகுதியை சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் சிலர் சிறுமியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்து மருத்துவ செலவை ஏற்றனர். இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். பின்னர் முஸ்லிம் அமைப்பினர், அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து சிறுமியின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடத்தி அப்பகுதியில் உள்ள மின்மயானத்தில் உடலை தகனம் செய்தனர்.