அதானி குழுமம் பயனடையவே வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன - காங்கிரஸ் குற்றச்சாட்டு
இந்திய உணவு தானிய சந்தையை அதானி குழுமத்திடம் ஒப்படைக்கும் நோக்கத்துடன் வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
புதுடெல்லி,
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் பிரதமர் மோடிக்கு கேள்விகள் விடுத்து ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு 2 ஆண்டுகளுக்கு முன்பு வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. அதற்கான உள்நோக்கம், இந்தியாவின் உணவு தானிய சந்தையை பிரதமருக்கு நெருக்கமான கார்ப்பரேட் நண்பர்களிடம் ஒப்படைப்பதுதான் என்பது ஒட்டுமொத்த நாட்டுக்கும் தெரியும்.
அந்த சட்டங்களால் அதானி குழுமத்தின் 'அதானி அக்ரி லாஜிஸ்டிக்ஸ்' தான் பெரிதும் பலன் அடைந்திருக்கும். இந்திய உணவு கழகத்தின் சில ஒப்பந்தங்களால் அந்நிறுவனம் பெரிய அளவில் பலன் அடைந்து வருகிறது. சமீபத்தில் கூட உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் சேமிப்பு கிடங்குகள் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.
ஆனால், விவசாயிகள் போராட்டம் காரணமாக, மத்திய அரசின் சதி, தற்காலிகமாக முறியடிக்கப்பட்டது. வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற்றது.
மேலும், கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் 30-ந்தேதி, அதானி துறைமுகங்களுக்கு சாதகமாக குஜராத் ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. 2019-ம் ஆண்டுக்கு முன்பு மத்திய வர்த்தக மந்திரியாக இருந்த நிர்மலா சீதாராமன், பொதுத்துறை நிறுவனமான மத்திய சேமிப்புகிடங்கு கழகத்துக்கு எதிராகவும், அதானி குழுமத்துக்கு ஆதரவாகவும் நிலைப்பாடு எடுத்தார்.
மேலிடத்தின் தெளிவான உத்தரவு இல்லாமல் அப்படி செய்யக்கூடிய துணிச்சல் அவருக்கு இருக்குமா?
பின்னர், பியூஸ் கோயல் மத்திய வர்த்தக மந்திரி ஆன பிறகும் மத்திய அரசின் நிலைப்பாடு மாறவில்லை.
இதற்கிடையே, இமாசலபிரதேசத்தில் ஆப்பிள் கொள்முதலில் ஏகபோக அதிகாரம் செலுத்த அதானி நிறுவனம் அனுமதிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இவை தொடர்பாக பிரதமர் மோடி தனது மவுனத்தை கலைப்பாரா? என்று அவர் கூறியுள்ளார்.