சொத்து தகராறில் விவசாயி படுகொலை


சொத்து தகராறில் விவசாயி படுகொலை
x

பெலகாவியில் சொத்து தகராறில் விவசாயி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது சகோதரர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெலகாவி:-

சொத்து தகராறு

பெலகாவி மாவட்டம் சவதத்தி தாலுகா கோரவங்கோலா கிராமத்தை சேர்ந்தவர் மகாந்தேஷ் (வயது 42). விவசாயி. இவரது சகோதரர் சித்தப்பா. இந்த நிலையில் சொத்து பிரச்சினை தொடர்பாக மகாந்தேஷ், சித்தப்பா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சித்தப்பா, தனது நண்பர் பாபு என்பவர் உதவியுடன் மகாந்தேசை தனது விளைநிலத்திற்கு அழைத்து வந்தார். பின்னர் அவர்கள் ஒன்றாக சேர்ந்து மதுகுடித்தனர். அப்போது அவர்களுக்கு இடையே சொத்து பிரச்சினை தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில், சித்தப்பா தனது துண்டை கொண்டு மகாந்தேசின் கழுத்தை இறுக்கினார்.

இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மகாந்தேஷ் உயிரிழந்தார். பின்னர் சித்தப்பா தனது நண்பர் பாபு உதவியுடன் மகாந்தேசின் உடலை கால்வாயில் வீசினார். மேலும் அவரது மோட்டார் சைக்கிளையும் கால்வாயில் தள்ளிவிட்டனர். இதுகுறித்து சவதத்தி போலீசாருக்கு தெரியவந்தது. உடனே அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது மகாந்தேசின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

2 பேர் கைது

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சொத்து தகராறில் மகாந்தேசை அவரது சகோதரா் சித்தப்பா கழுத்தை இறுக்கி படுகொலை செய்தது தெரியவந்தது. மேலும் அவருக்கு பாபு உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்தப்பா மற்றும் பாபுவை கைது செய்தனர். மேலும் அவர்கள் 2 பேரிடமும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story