கர்நாடகத்தில் 4 லட்சம் தகுதியற்ற விவசாயிகள், ரூ.442 கோடி பெற்றனர்; பணத்தை திரும்ப வசூலிக்க அரசு உத்தரவு
கர்நாடகத்தில் பிரதமரின் கிருஷி சம்மான் திட்டத்தின் கீழ் 4 லட்சம் தகுதியற்ற விவசாயிகள் ரூ.442 கோடி பெற்றது தொியவந்துள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் பிரதமரின் கிருஷி சம்மான் திட்டத்தின் கீழ் 4 லட்சம் தகுதியற்ற விவசாயிகள் ரூ.442 கோடி பெற்றது தொியவந்துள்ளது.
வசூலிக்கும் பணி
பிரதமரின் கிருஷி சம்மான் திட்டத்தின் கீழ் சிறு-குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம், மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. அதேபோல் கர்நாடக அரசு சார்பில் அதே திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் 2 தவணையாக வழங்கப்படுகிறது. ஆகமொத்தம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. கர்நாடகத்தில் மட்டும் இந்த திட்டத்தின் கீழ் சுமார் 40 லட்சம் விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சுமார் 4 லட்சம் விவசாயிகள் தகுதி இல்லாதபோதும் இந்த திட்டத்தின் பயனை அடைந்து வருகிறார்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அவர்கள் இதுவரை ரூ.442 கோடி பெற்றுள்ளனர். அவர்களிடம் இந்த தொகையை திரும்ப வசூலிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது வருமான வரி செலுத்துவோர், குத்தகைக்கு நிலத்தை உழுபவர்கள், மாதம் ரூ.10 ஆயிரத்திற்கும் மேல் ஓய்வூதியம் பெறுவோர், டாக்டர்கள், என்ஜினீயர்கள், வக்கீல்கள், கணக்கு தணிக்கையாளர்கள், கட்டிடக்கலை என்ஜினீயர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த திட்டத்தின் பயனை பெற தகுதியற்றவர்கள்.
குத்தகைக்கு நிலம்
இதுகுறித்து விவசாயத்துறை கமிஷனர் சரத் கூறுகையில், 'இந்த கிருஷி சம்மான் திட்டம் தொடங்கப்பட்டபோது விவசாயிகள் தாமாகவே ஆன்லைனில் பதிவு செய்யும் முறை இருந்தது. அதை சிலர் தவறாக பயன்படுத்தி இந்த திட்டத்தின் பயனை பெற்று வருகிறார்கள். சுமார் 4 லட்சம் தகுதியற்ற விவசாயிகள் இதுவரை ரூ.442 கோடி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இதில் 92 ஆயிரம் விவசாயிகள் வருமானவரி செலுத்துவோர், 2 லட்சம் விவசாயிகள் குத்தகைக்கு நிலம் உழுபவர்கள், 1 லட்சம் பேர் தவறான தகவலை ஆன்லைனில் தெரிவித்தவர்கள் ஆவார்கள். அந்த தொகையை அவர்களிடம் இருந்து திரும்ப பெற முடிவு செய்துள்ளோம். இந்த பணிகளை மேற்கொள்ளும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என்றார்.