மராட்டிய துணை முதல்-மந்திரி மனைவிக்கு மிரட்டல்; ஆடை வடிவமைப்பாளர் கைது
மராட்டிய துணை முதல்-மந்திரியின் மனைவி அம்ருதா பட்னாவிசுக்கு மிரட்டல் விடுத்த பெண் ஆடை வடிவமைப்பாளரை மும்பை போலீசார் கைது செய்து உள்ளனர்.
மும்பை,
மராட்டியத்தில் பா.ஜ.க. மற்றும் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணி இணைந்து, கூட்டணி அரசு அமைந்து உள்ளது. இதில், பா.ஜ.க.வை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரியான தேவேந்திர பட்னாவிஸ் தற்போது துணை முதல்-மந்திரியாக பதவி வகிக்கிறார்.
இவரது மனைவி அம்ருதா பட்னாவிஸ். இந்நிலையில், அம்ருதாவுக்கு ரூ.1 கோடி கொடுக்க முன்வந்து, மிரட்டலும் விடுத்து உள்ளார் என்று ஆடை மற்றும் நகை வடிவமைப்பாளரான அனீக்ஷா ஜெய்சிங்கானி என்பவர் மீது அம்ருதா குற்றச்சாட்டு எழுப்பினார்.
அனீக்ஷா 16 மாதங்கள் தன்னுடன் தொடர்பில் இருந்ததுடன், வீட்டுக்கும் வந்து சென்றுள்ளார் என எப்.ஐ.ஆரில் தெரிவித்து உள்ளார். தனது நகைகள், ஆடைகளை அணிந்து கொண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் தனக்கு வருவாய் கிடைக்க உதவியாக இருக்கும் என பேசி, அம்ருதாவை தனது வழிக்கு அனீக்ஷா கொண்டு வந்து உள்ளார்.
இந்நிலையில், அனீக்ஷாவின் தந்தை தொடர்புடைய குற்ற வழக்கு ஒன்றில் தன்னை தலையிட கோரியும், அதற்கு தனக்கு லஞ்சம் கொடுக்க அவர் முனைந்ததுடன், மிரட்டலும் விடுத்து உள்ளார் என புகாரில் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தில் அனீக்ஷாவின் தந்தை அனில் ஜெய்சிங்கானிக்கும் தொடர்பு உள்ளது என மலபார் ஹில்ஸ் காவல் நிலையத்தில் அம்ருதா புகார் அளித்து உள்ளார்.
ரூ.1 கோடி கொடுக்க முன்வந்த பின், அதிர்ச்சி அடைந்து அனீக்ஷாவை அம்ருதா தவிர்க்க தொடங்கினார். இதனால், பல வீடியோ காட்சிகள், குரல் பதிவுகள் மற்றும் பல்வேறு குறுஞ்செய்திகளையும் அம்ருதாவுக்கு அனுப்பி அனீக்ஷா மிரட்டி உள்ளார் என கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து புகாரின் பேரில், அனிலின் மகன் ஆக்ஷன் ஜெய்சிங்கானியை முதலில் போலீசார் பிடித்து சென்று விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் அனீக்ஷாவை மும்பை போலீசார் இன்று கைது செய்து உள்ளனர். மற்றொரு குற்றவாளியான அனில் ஜெய்சிங்கானியை தேடி வருகிறோம் என போலீசார் தெரிவித்தனர்.