தன்னிறைவை நோக்கி வேகமாக வளரும் இந்திய விமானவியல் துறை; விமானப்படை தலைமை தளபதி வி.ஆர்.சவுத்ரி பேச்சு


தன்னிறைவை நோக்கி வேகமாக வளரும் இந்திய விமானவியல் துறை; விமானப்படை தலைமை தளபதி வி.ஆர்.சவுத்ரி பேச்சு
x

இந்திய விமானவியல் துறை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தன்னிறைவை நோக்கி வேகமாக வளர்ந்து வருகிறது என்று இந்திய விமானப்படை தலைமை தளபதி வி.ஆர்.சவுத்ரி கூறினார்.

பெங்களூரு:

வரும் வாய்ப்புகள்

பெங்களூருவில் உள்ள விமான சோதனை நிறுவனத்தின்(ஏ.எஸ்.டி.இ.) பொன் விழாவையொட்டி "கடந்த காலத்தில் இருந்து பாடம் கற்றல், எதிர்காலத்தில் வரும் வாய்ப்புகள்'' என்ற தலைப்பில் 2 நாள் கருத்தரங்கம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இந்த கருத்தரங்கில் விமானப்படை தலைமை தளபதி வி.ஆர்.சவுத்ரி கலந்து கொண்டு பேசியதாவது:-

போர் விமானம் மற்றும் அதுதொடர்பான உபகரணங்கள் வடிவமைப்பு, வளர்ச்சி, சோதனை, மதிப்பீடு, செயல்பாடு மற்றும் பயிற்சி அளிப்பதில் விமான சோதனை நிறுவனம் முக்கிய பங்காற்றுகிறது. தொழில் நிறுவனங்கள், தகுதியான அனுமதி பெற்ற விமான சோதனை நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற இது சரியான நேரம்.

உதவ வேண்டும்

இந்திய பாதுகாப்பு துறையுடன் இணைந்து பணியாற்ற இந்த விமான சோதனை நிறுவனம் சிறப்பிடத்தை பெற்றுள்ளது. வடிவமைப்பு மற்றும் வளர்ச்சி செயல்பாடுகளில் ஈடுபட்டு அதன் மூலம் பாதுகாப்பு ஆய்வக ஆராய்ச்சிக்கு இந்த நிறுவனம் உதவ வேண்டும். நாட்டில் விமானவியல் துறையின் வளர்ச்சி மூலம் கிடைக்கும் வாய்ப்புகளை இந்த நிறுவனம் மற்றும் விமானப்படை பயிற்சி விமானி பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இந்திய விமானவியல் துறை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தன்னிறைவை நோக்கி வேகமாக வளர்ந்து வருகிறது. நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்ய உள்நாட்டு உற்பத்தி மற்றும் அரசு-தனியார் பங்களிப்பை அதிகரிக்க அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இது நமது விமான பரிசோதனை நிறுவனங்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்கியுள்ளது.

புதிய தொழில்நுட்பங்கள்

விமான பரிசோதனை என்பது ஒரு சிறப்பு வாய்ந்த விஷயம். மனிதவள பயிற்சி, உள்கட்டமைப்புகளுக்கு உதவுவது, திறமையான விமான பரிசோதனை பணிகளுக்கு நல்ல சூழலை உருவாக்குவதற்கு உலக அளவில் நிறுவனங்கள் அதிகளவில் முதலீடு செய்கின்றன. நமது கடந்த கால செயல்களில் இருந்து நாம் அவசியம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அதன் மூலம் சவால்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பாதுகாப்பை அதிகரிக்க பரிசோதனை முறைகளை வலுப்படுத்த வேண்டும்.

நமது திறனை மேம்படுத்தி திட்ட செலவுகளையும், காலத்தையும் குறைக்க வேண்டும். செயற்கை முறையிலான உளவு தகவல்கள், பெரிய அளவிலான தரவு ஆய்வுகள் போன்ற புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். விமான பரிசோதனையில் தன்னிறைவு அடைய விமான சோதனை நிறுவனம் தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்திய விமானப்படையை நவீனமயமாக்குவது மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்த இந்த நிறுவனம் சிறப்பாக பணியாற்றி வந்துள்ளது.

இவ்வாறு வி.ஆர்.சவுத்ரி பேசினார்.


Next Story