மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் குழந்தையை கொன்ற தந்தை கைது


மனைவியுடன் ஏற்பட்ட தகராறில்  குழந்தையை கொன்ற தந்தை கைது
x

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் குழந்தையை கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு: விஜயாப்புரா மாவட்டம் தாலிகோட்டே அருகே கோனல் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி சாவித்திரி. இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகளும், 2½ வயதில் சிவராஜ் என்ற ஆண் குழந்தையும் இருந்தது. குடும்பத் தகராறால் 2 குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சாவித்திரி வந்திருந்தார். பின்னர் தனது மனைவியை சமாதானப்படுத்த சந்திரசேகர் மாமனார் வீட்டுக்கு வந்திருந்தார். இந்த நிலையில், சம்பவத்தன்று காலையில் குழந்தை சிவராஜ் மற்றும் 5 வயது சிறுமி வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு போராடினார்கள். உடனே 2 பேரையும் அரசு ஆஸ்பத்திரியில் சாவித்திரி அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்து விட்டது. சிறுமிக்கு மட்டும் டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

போலீஸ் விசாரணையில் சந்திரசேகர் உணவில் விஷம் கலந்து கொடுத்ததால், அதை சாப்பிட்ட குழந்தை பலியானது தெரியவந்தது. அதாவது சந்திரசேகருக்கு கடன் இருந்ததால், அதனை அடைக்க நிலத்தை விற்க முயன்றுள்ளார். இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஓட்டலில் வாங்கி வந்த உணவில் விஷத்தை கலந்து சாவித்திரியிடம் கொடுத்துள்ளார். ஆனால் அந்த உணவை குழந்தைகள் சாப்பிட்டதால், 2½ வயது குழந்தை பலியான தெரியவந்துள்ளது. தாலிகோட்டே போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகரை கைது செய்துள்ளனர்.


Next Story