கடன் தொல்லையால் பெண் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை


கடன் தொல்லையால் பெண் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 7 Oct 2023 6:45 PM GMT (Updated: 7 Oct 2023 6:45 PM GMT)

தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டலுக்கு பயந்து பெண் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக நிதி நிறுவன ஊழியர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சிக்கமகளூரு:

சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா தங்கிலி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவரம்மா (வயது 54). கணவனை இழந்த இவருக்கு ராகவேந்திரா என்ற மகன் உள்ளார். இருவரும் விவசாயம் செய்து வந்தனர். இந்தநிலையில் தேவரம்மா விவசாயத்திற்காக தங்கிலி கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.75 ஆயிரம் கடன் பெற்றிருந்தார். வாரம் தோறும் தவணை முறையில் கடன் தொகையை செலுத்தி வந்தார்.

இந்தநிலையில் கடந்த சில வாரமாக தேவரம்மாவால் கடன் தொகையை செலுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் தேவரம்மாவின் வீட்டிற்கு வந்து பணம் கேட்டு மிரட்ட தொடங்கினர்.மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் தேவரம்மாவை, கடூர் அலுவலகத்திற்கு அழைத்து சென்று மிரட்டியுள்ளனர்.

அன்றைய தினம் காலை முதல் மாலை வரை தேவரம்மாவை நிதி நிறுவன அலுவலகத்தில் அமர வைத்து கடன் தொகை திரும்ப கேட்டு தொல்லை கொடுத்து வந்தனர். பின்னர் கடன் தொகையை 2 நாட்களில் திரும்ப செலுத்தவேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தனர். இதனால் மனம் உடைந்து காணப்பட்ட தேவரம்மா நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து கடூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தேவரம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அப்போது தேவரம்மாவை போல பல பெண்கள் நிதி நிறுவனத்திடம் சிக்கியிருப்பது தெரியவந்தது.

மேலும் பணம் கொடுக்க மறுக்கும் பெண்களை அந்த நிதி நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் மிரட்டி வந்தது தெரியவந்தது. அதேபோல தேவரம்மாவை மிரட்டியதில் அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தேவரம்மாவின் மகன் கொடுத்த புகாரின் பேரில் கடூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிதி நிறுவனத்தை சேர்ந்த 3 ஊழியர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story