பெங்களூரு அருகே துண்டு, துண்டாக வெட்டி பெண் படுகொலை


பெங்களூரு அருகே துண்டு, துண்டாக வெட்டி பெண் படுகொலை
x

பெங்களூரு அருகே, காணாமல் போனதாக தேடப்பட்ட பெண்ணை துண்டு, துண்டாக வெட்டி படுகொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. வீட்டில் வாடகைக்கு வசித்தவர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

பெங்களூரு:

துண்டு, துண்டாகி வெட்டி கொலை

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா பன்னரகட்டா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஜனதா காலனியில் வசித்து வந்தவர் கீதம்மா (வயது 53). இவர், தனக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு விட்டு இருந்தார். அங்கு வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் வாடகைக்கு வசித்து வந்தனர். இதற்கிடையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு திடீரென்று கீதம்மா காணாமல் போய் விட்டார்.

கீதம்மாவை, அவரது குடும்பத்தினர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், நேற்று அதிகாலையில் அழுகிய நிலையிலும், நிர்வாணமாகவும் கீதம்மா கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் கீதம்மாவை துண்டு, துண்டாக வெட்டி மர்மநபர்கள் கொலை செய்திருந்தார்கள். அவரது கை, கால் துண்டிக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

வாடகைக்கு வசித்தவர்களுக்கு...

தகவல் அறிந்ததும் பன்னரகட்டா போலீசார் விரைந்து வந்து கீதம்மாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். பின்னர் அவரது உடல் பாகங்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கீதம்மாவை, அவரது வீட்டில் வசித்து வந்தவர்களே கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். ஏனெனில் கடந்த 2 நாட்களாக அவர்கள் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டனர்.

இதனால் வடமாநிலத்தை சேர்நதவர்களே கீதம்மாவை கொலை செய்துவிட்டு தப்பி ஓடி இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் என்ன காரணத்திற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து பன்னரகட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த கொலை சம்பவம் பன்னரகட்டாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story