பண்டிகை கால முன்னெச்சரிக்கை; டெல்லியில் போலி வெடிகுண்டுகளை வைத்து சோதனை: சிறப்பு படை போலீசார் முடிவு
டெல்லியில் பண்டிகை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் போலியான சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை வைத்து டெல்லி சிறப்பு படை போலீசார் சோதனை செய்ய உள்ளனர்.
புதுடெல்லி,
நாட்டில் அடுத்தடுத்து காந்தி ஜெயந்தி போன்ற முக்கிய நாட்கள் மற்றும் ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வரவுள்ளன. இதனை முன்னிட்டு மக்கள் அதிகம் கூட கூடிய இடங்களில் ஆபத்துகள் நேராத வண்ணம் கவனிக்க கூடிய கூடுதல் பொறுப்பு போலீசாருக்கு வந்துள்ளது.
இதனை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்க டெல்லி போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.
டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பண்டிகை காலங்களை முன்னிட்டு பல்வேறு பயங்கரவாத அச்சுறுத்தல் நடத்த கூடிய சாத்தியம் பற்றிய உளவு தகவல் போலீசாருக்கு கிடைத்து உள்ளது. இதன் தொடர்ச்சியாக, எதிர்பாராத சம்பவங்கள் எதுவும் நடக்காமல் தடுக்கும் முயற்சியாக, போலியான சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை நகர் முழுவதும் வைத்து அதனை போலீசார் கண்காணிக்கிறார்களா? என்ற சோதனை நடைபெறும்.
அப்படி, அந்தந்த பகுதிகளில் போலியான வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க தவறினால், துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கக்கூடும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்பும், 15 போலியான வெடிகுண்டுகளை வைத்து, அவற்றை போலீசார் கண்டறிகிறார்களா? என்ற சோதனையில் டெல்லி சிறப்பு படை ஈடுபட்டது. இதில், 15 வெடிகுண்டுகளில் சரியான நேரத்தில் 10 வெடிகுண்டுகள் போலீசாரால் கண்டறியப்பட்டன. இதேபோன்று, சோதனை, ரோந்து பணி உள்ளிட்டவையும் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.