மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி கொடூர தாக்குதல் மேலும் ஒரு நபர் கைது

இந்த சம்பவத்தில் கைதான முக்கிய குற்றவாளி குய்ராம் ஹெராதாஸ் உள்ளிட்ட 2 பேரின் வீடுகளை கிராம பெண்கள் சூறையாடினார்கள். அந்த வீடுகளை தீ வைத்தும் எரித்தனர்.
இம்பால்
கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை மாற்று சமூகத்தினர் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மே 4 அன்று நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ ஜூலை 19 அன்று வெளியாகி உள்ளது. 26 வினாடிகள் கொண்ட வீடியோ நாடு தழுவிய பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டு 11 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த கொடூர செயலில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளையும் பிடிக்க மணிப்பூர் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஐந்தாவது குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் 19 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.அவரது பெயர் நுங்சி தோய் மேட்டேய் (வயது 19 ) இவரையும் சேர்த்து இதுவரை போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர்.
அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை இன்று போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.
மணிப்பூரில் சற்று கலவரம் ஓய்ந்து இயல்பு வாழ்க்கை திரும்பும் சூழ்நிலை உருவாகிய நிலையில் 2 பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தபட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி மேலும் பதற்றத்தை உருவாக்கி இருக்கிறது. மீண்டும் மணிப்பூரில் போராட்டங்கள் வெடித்துள்ளது.
இந்த சம்பவத்தை கண்டித்து பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த சம்பவத்தில் கைதான முக்கிய குற்றவாளி குய்ராம் ஹெராதாஸ் உள்ளிட்ட 2 பேரின் வீடுகளை கிராம பெண்கள் சூறையாடினார்கள். அந்த வீடுகளை தீ வைத்தும் எரித்தனர்.
இதன் தொடர்ச்சியாக தலைநகர் இம்பாலில் உள்ள காரி பகுதியில் இன்று பெண்கள் ஒன்று திரண்டனர். அவர்கள் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நடுரோட்டில் டயர்களை போட்டு எரித்தனர். இதனால் பதற்றமான சூழ்நிலை உருவானது.
இதுபற்றி அறிந்ததும் மணிப்பூர் ஆயுதபடை போலீசார், ராணுவ வீரர்கள், அதிவிரைவு படை போலீசார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தீயில் எரிந்து கொண்டிருந்த டயர்களில் தண்ணீரை ஊற்றி அணைத்தனர்.
தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையில் மணிப்பூரின் முக்கிய நகரங்களில் போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினார்கள். போராட்டக்காரர்களை ஒடுக்க தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு உள்ளனர்.






