திரைப்பட விளம்பரங்களில் சான்றிதழ் வகையை கட்டாயம் குறிப்பிடவேண்டும்; மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியம் அறிவிப்பு


திரைப்பட விளம்பரங்களில் சான்றிதழ் வகையை கட்டாயம் குறிப்பிடவேண்டும்; மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியம் அறிவிப்பு
x
தினத்தந்தி 12 Oct 2022 2:02 AM GMT (Updated: 12 Oct 2022 2:02 AM GMT)

திரைப்பட விளம்பரங்களில் சான்றிதழ் வகையை கட்டாயம் குறிப்பிடவேண்டும் என மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை:

மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியத்தின் (சி.பி.எப்.சி.) மண்டல அதிகாரி டி.பாலமுரளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

சுவரொட்டிகள், பத்திரிகை விளம்பரங்கள், நோட்டீஸ்கள், பதாகைகள் மற்றும் ஊடகங்களில் வெளியிடப்படும் திரைப்பட விளம்பரங்களில் சான்றிதழ் வகையை கட்டாயம் குறிப்பிடவேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் பார்க்கும் திரைப்படங்களுக்கு, வயது வந்தோருக்கு மட்டும் ('ஏ' சான்றிதழ்) வழங்கப்படுகிறது. 18 வயதுக்கு உட்பட்டவர்கள், பெற்றோரின் அனுமதியுடன் பார்ப்பதற்கான திரைப்படங்களுக்கு 'யூ/ஏ' சான்றிதழ் வழங்கப்படுகிறது. அனைவரும் பார்க்கக்கூடிய படங்களுக்கு 'யூ' சான்றிதழ் வழங்கப்படுகிறது.

திரைப்பட (சான்றிதழ்) விதி 1983-ன் கீழ் இந்த சான்றிதழ்கள் திரைப்பட சான்றளிப்பு வாரியத்தால் வழங்கப்படுகின்றன. திரைப்படங்களுக்கு விளம்பரங்கள் வெளியிடும்போது, எந்த சான்றிதழ் வகையை சேர்ந்த திரைப்படம் என்பதை கட்டாயம் குறிப்பிடவேண்டும் என்று மத்திய சான்றளிப்பு வாரியம் (சி.பி.எப்.சி.) அறிவுறுத்தியுள்ளது. 'யூ' சான்றிதழை தயாரிப்பாளர் விரும்பினால் விளம்பரங்களில் வெளியிட்டுக்கொள்ளலாம். தணிக்கை சான்றிதழ் வகையை குறிப்பிட தவறுபவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story