பிரபல பைக் ஷோரூமில் திடீர் தீ விபத்து: பல கோடி மதிப்பிலான வாகனங்கள் எரிந்து சேதம்
இந்த விபத்து குறித்து என விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆந்திரா,
ஆந்திர மாநிலம், விஜயவாடா, கே.பி நகர், சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பைக் ஷோரூம் உள்ளது. விஜயவாடா மற்றும் கிருஷ்ணா மாவட்ட தலைமையகம் என்பதால் இங்கு ஏராளமான பைக்குகள் விற்பனைக்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
ஷோரூம் முதல் தளத்தில் எலக்ட்ரீக் பைக்குகளும், கீழ் தளத்தில் பெட்ரோல் பைக்குகளும் நிறுத்தி வைத்திருந்தனர். மேலும் அதே வளாகத்தில் பைக் ஷோரூம் சர்வீஸ் சென்டரும் இயங்கி வந்தது. நேற்று இரவு ஷோரூம் ஊழியர்கள் முதல் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு எலக்ட்ரீக் பைக்குக்கு சார்ஜ் போட்டனர். பின்னர் ஞாபக மறதியால் எலக்ட்ரீக் பைக்குக்கு போட்டா சார்ஜை நிறுத்தாமல் சென்றுவிட்டனர்.
எலக்ட்ரீக் பைக்கிற்கு நீண்ட நேரம் சார்ஜ் ஏறியதால், இன்று அதிகாலை எலக்ட்ரானிக் பைக் திடீரென வெடித்து சிதறியது. இதன் காரணமாக, அருகில் உள்ள பைக்குகளுக்கு தீ பரவியது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவலாளிகள் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் முதல் தளத்திலிருந்து கீழ்தளத்திற்கு பரவியது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் பைக்குகளுக்கும் பரவியது. தொடர்ந்து தீயணைப்புத் துறையினர், 3 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்க நீண்ட நேரம் போராடினர்.
எனினும் தீ வேகமாக பரவியதில், பல கோடி ரூபாய் மதிப்பிலான வாகனங்கள் எரிந்து சேதம் அடைந்தது. இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.