தார்வாரில் வீடு உள்பட 2 இடங்களில் தீ விபத்து


தார்வாரில் வீடு உள்பட 2 இடங்களில் தீ விபத்து
x
தினத்தந்தி 3 March 2023 12:15 PM IST (Updated: 3 March 2023 12:16 PM IST)
t-max-icont-min-icon

தார்வாரில் வீடு உள்பட 2 இடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.16 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

உப்பள்ளி-

தானியங்கள் எரிந்து சாம்பல்

தார்வார் மாவட்டம் குந்துகோல் தாலுகா ஹிரேநேர்த்தி கிராமத்தை சேர்ந்தவர் பசப்பா போதியாலா. நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டின் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதை பார்த்த பசப்பா தீயை அணைக்க முடியாமல் அவதிப்பட்டார். இது குறித்து குந்துகோல் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த விபத்தில் ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமானது. இது குறித்து குந்துகோல் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். அதில் மின் கசிவால் விபத்து நடந்திருப்பதாக தெரியவந்தது. இந்த விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான கோதுமை, சோளம் உள்பட சில தானியங்கள், மற்றும் ரூ.2 லட்சம் பணம், ரூ.4 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் என ரூ.8 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக தெரியவந்தது. இது குறித்து குந்துகோல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

லாரியில் தீ விபத்து

உப்பள்ளி நவநகர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட காமனகட்டியை அடுத்து உள்ளது கரியம்மா கோவில் படாவனே பகுதியை சோ்ந்தவர் அனில் கோசாமி. நேற்று முன்தினம் இவரது லாரி ஒன்று பழைய பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் அடங்கிய மூட்டையை ஏற்றி கொண்டு சென்றது. காமனகட்டி பகுதியில் சென்றபோது, லாரியின் மீது மின் வயர் உரசியது. அப்போது எதிர்பாராவிதமாக லாாியில் இருந்த மூட்டைகள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அந்த பொருட்கள் முழுவதும் தீ பிடித்து எரிந்தது. இதை பார்த்த டிரைவர் உடனே லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கி குதித்து தப்பியோடிவிட்டார்.

இதனால் நடுரோட்டில் லாரியில் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில் பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இது குறித்து நவநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Next Story