கோவையை தொடர்ந்து ஜம்முவில் விமான கடத்தல் ஒத்திகையில் ஈடுபட்ட தேசிய பாதுகாப்பு படை
ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள விமான படை தளத்தில் வைத்து, தேசிய பாதுகாப்பு படையினர், விமான கடத்தல் ஒத்திகையில் ஈடுபட்டு உள்ளனர்.
ஜம்மு,
விமான கடத்தல் போன்ற தவிர்க்க முடியாத நெருக்கடியான சூழலில், ஒன்றிணைந்து விமான நிலைய அதிகாரிகள் பணியாற்றுவதற்கு தயாராகும் வகையில், விமான கடத்தல் மாதிரி ஒத்திகை நிகழ்ச்சியானது, ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள விமான படை தளத்தில் நடத்தப்பட்டு உள்ளது.
இதில், நிச்சயமற்ற ஒரு சூழலை எதிர்கொள்ளும் விமான நிலையத்தின் திறன் மற்றும் கடத்தல்காரர்களின் அச்சுறுத்தலை எதிர்கொள்வது உள்ளிட்டவற்றை பரிசோதிக்கும் வகையில் இந்த ஒத்திகை நிகழ்ச்சியின் நோக்கம் அமைந்து உள்ளது.
இந்த ஒத்திகையில், இந்திய விமான படை, மாநில அரசு, காஷ்மீர் போலீசார், மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் பல முக்கிய அமைப்பினர் ஈடுபட்டனர்.
இதன்படி, ஜம்மு விமான நிலையத்தில் தேசிய பாதுகாப்பு படையினர் ஒரு முழு அளவிலான விமான கடத்தல் ஒழிப்புக்கான ஒத்திகையை நடத்தி உள்ளனர் என்று அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது.
இந்த மாதிரி விமான கடத்தல் ஒத்திகையில், விமான கடத்தல்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவது மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் அதிரடியாக செயல்பட்டு, கடத்தல்காரர்களிடம் இருந்து விமானம் மற்றும் பயணிகள், உடைமைகள் உள்ளிட்டவற்றை மீட்பது ஆகிய விசயங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
இதற்கு முன்பு சமீபத்தில் கடந்த 23-ந்தேதி கோவை சர்வதேச விமான நிலையத்தில் இதுபோன்றதொரு விமான கடத்தல் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.