வெளிநாட்டு பிரதிநிதிகள் நாளை மண்டியா வருகை-கலெக்டர் குமார் தகவல்

மைசூருவில் நடக்கும் ஜி20 நாடுகள் கூட்டத்தில் பங்கேற்றுள்ள வெளிநாட்டு பிரதிநிதிகள் நாளை(புதன்கிழமை) மண்டியா வர உள்ளதாக கலெக்டர் குமார் தெரிவித்துள்ளார்.
மண்டியா:-
ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள்
ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டம் மைசூருவில் நேற்று தொடங்கியது. நேற்று முதல் 3-ந்தேதி வரை 4 நாட்கள் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், ஜி20 நாடுகள் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள வெளிநாட்டு பிரதிநிதிகள் நாளை (புதன்கிழமை) மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவுக்கு வர உள்ளனர். அவர்களை வரவேற்க தேவையான ஏற்பாடுகளை செய்வது குறித்து நேற்று மண்டியா மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், அனைத்து துறை அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
மண்டியா வருகை
இந்த கூட்டத்தில் கலெக்டர் குமார் பேசியதாவது:-
ஜி20 நாடுகள் கூட்டத்தில் பங்கேற்க வெளிநாட்டு பிரதிநிதிகள் மைசூரு வந்துள்ளனர். அவர்களில் 150 பேர் வருகிற 2-ந்தேதி மண்டியாவுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். அன்றைய தினம் மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள பிருந்தாவன் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சென்று பார்வையிட உள்ளனர்.
அவர்களை வரவேற்று தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும். ஸ்ரீரங்கப்பட்டணாவுக்கு வருகிற 2-ந்தேதி சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்க வேண்டும். அவர்கள் பார்வையிட உள்ள இடங்களுக்கு நாம் முன்கூட்டியே சென்று ஆய்வு செய்ய வேண்டும். தூய்மைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மின்விளக்குகள் சரியாக உள்ளதா என்று உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






