ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வந்தடைந்தார்; இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்பு!


ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வந்தடைந்தார்; இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்பு!
x
தினத்தந்தி 8 Jun 2022 3:07 AM GMT (Updated: 8 Jun 2022 3:34 AM GMT)

ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி டாக்டர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் இந்தியா வந்தடைந்தார்.

புதுடெல்லி,

ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி டாக்டர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் இந்தியா வந்தடைந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சபஹர் துறைமுகம், ஆப்கானிஸ்தான் நிலவரம் மற்றும் உலகளாவிய எரிசக்தி சந்தை உள்ளிட்டவை இருதரப்பு பேச்சுவார்த்தையில் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஈரான் வெளியுறவுத்துறை மந்திரியாக பொறுப்பேற்ற பிறகு, அப்துல்லாஹியன் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

"இந்தப் பயணம் இருநாட்டு ஆழமான வரலாற்று உறவுகளையும் கூட்டாண்மையையும் மேலும் மேம்படுத்தும்" என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.


முகமது நபிக்கு எதிரான பாஜக செய்தித் தொடர்பாளர்களின் சர்ச்சைக்குரிய கருத்துகள் அரபு நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு பின், இந்தியாவிற்கு வருகை தரும் அரபு நாட்டு பிரதிநிதி ஒருவரின் முதல் பயணமாக இந்த பயணம் அமைந்துள்ளது.

முன்னதாக, முகமது நபிக்கு எதிரான பாஜக செய்தித் தொடர்பாளர்களின் சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பாக ஈரான் அதிகாரப்பூர்வ எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. இந்த சர்ச்சைக்குரிய விவகாரத்தில் ஈரான் அரசின் கடும் எதிர்ப்பை தெரிவிக்கும் பொருட்டு, ஈரானுக்கான இந்திய தூதர் வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டார். அங்கு ஈரானுக்கான இந்திய தூதர் வருத்தம் தெரிவித்ததோடு, இஸ்லாத்தின் நபிகள் மீதான எந்த விதமான அவமானத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story