எஸ்.ஐ. தேர்வு முறைகேட்டில் கைதான முன்னாள் கூடுதல் டி.ஜி.பி. அம்ருத்பாலுக்கு நிபந்தனை ஜாமீன்
எஸ்.ஐ. தேர்வு முறைகேட்டில் கைதான முன்னாள் கூடுதல் டி.ஜி.பி. அம்ருத்பாலுக்கு 14 மாதங்களுக்கு பிறகு நிபந்தனை ஜாமீன் வழங்கி கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான(எஸ்.ஐ.) எழுத்து தேர்வு நடைபெற்றது. 545 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட இந்த தேர்வு 92 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தேர்வில் முறைகேடு நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இந்த வழக்கு சி.ஐ.டி. போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில் தேர்வின்போது முறைகேடு நடந்தது உறுதியானது. இதையடுத்து சி.ஐ.டி. போலீசார் 80-க்கும் மேற்பட்ட தேர்வர்கள், இடைத்தரகர்களை கைது செய்தனர்.
மேலும் முறைகேட்டிற்கு மூளையாக செயல்பட்டதாக போலீஸ் நியமன பிரிவு முன்னாள் கூடுதல் டி.ஜி.பி. அம்ருத்பாலை கடந்த ஆண்டு(2022) ஜூலை மாதம் 4-ந் தேதி சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஒவ்வொரு தேர்வர்களிடம் இருந்தும் ரூ.30 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை லஞ்சம் பெற்றதாக கூறப்பட்டது.
இதற்கிடையே எஸ்.ஐ. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சி.ஐ.டி. போலீசாருக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே முன்னாள் கூடுதல் டி.ஜி.பி. அம்ருத்பால், தனக்கு ஜாமீன் வழங்க கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அவரது ஜாமீன் மனுக்களை ஐகோர்ட்டு 2 முறை தள்ளுபடி செய்தது. மேலும் மற்றொரு ஜாமீன் மனு மீதான விசாரணையை கர்நாடக ஐகோர்ட்டு ஒத்திவைத்து வந்தது.
இந்த நிலையில் நேற்று அம்ருத்பாலின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் பிரசன்ன குமார், எஸ்.ஐ. தேர்வு முறைகேடு வழக்கு தற்போது விசாரணையில் இருந்து வருவதால், வெளியே சென்று விசாரணை அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்குமாறு பரிந்துரை செய்தார். இதையடுத்து நீதிபதி இருதரப்பு வாதங்களையும் கேட்டார்.
பின்னர் நீதிபதி, முன்னாள் கூடுதல் டி.ஜி.பி. அம்ருத்பாலிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் ரூ.5 லட்சம் பிணைத்தொகை செலுத்தவும், கோர்ட்டு அனுமதியின்றி வெளிநாட்டிற்கு செல்ல கூடாது எனவும் கூறினார். அதுதவிர மேலும் சில நிபந்தனைகளை நீதிபதி விதித்தார். கைதாகி 14 மாதங்களுக்கு பிறகு அம்ருத்பாலிற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.