மணிப்பூர் கொடூரம்: இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநில போலீசார் தகவல்


மணிப்பூர் கொடூரம்: இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநில போலீசார் தகவல்
x

கோப்புப்படம்

மணிப்பூர் கொடூர சம்பவம் தொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.

இம்பால்,

மணிப்பூர் வன்முறை நாளுக்குநாள் மோசமாகிக் கொண்டே செல்லும் நிலையில், இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியதும், எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரம் உள்ளிட்டவற்றை எழுப்பி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. இதனால் நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் 2 இளம் பெண்களுக்கு கொடூரம் இழைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.

தௌபால் மாவட்டம், நோங்போக் செக்மாய் காவல் நிலையத்தின் கீழ் கடத்தல் மற்றும் கூட்டு பலாத்காரம் ஆகிய கொடூரமான குற்றத்தில் ஈடுபட்ட மேலும் மூன்று முக்கிய குற்றவாளிகள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், இதன்படி இதுவரை மொத்தம் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மணிப்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் மற்ற குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய மாநில காவல்துறை முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story