ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 4 வயது சிறுமி - மீட்கப்பட்ட சில நிமிடங்களில் உயிரிழப்பு
ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுமி பல மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
போபால்,
மத்தியபிரதேச மாநிலம் ராஜ்கர்க் மாவட்டம் பிப்லியா ரசொடா கிராமத்தை சேர்ந்த 4 வயது சிறுமி மகி. சிறுமி நேற்று கிராமத்தில் தனது மாமா வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் சிறுமி விழுந்தார்.
இது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் ஆழ்துளை கிணற்றுக்குள் 22 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்ட சிறுமியை மீட்க தீவிர முயற்சி மேற்கொண்டனர்.
ஆழ்துளை கிணற்றுக்கு அருகே புல்டோசர் மூலம் பள்ளம் தோண்டிய மீட்புக்குழுவினர், இன்று அதிகாலை 2.45 மணியளவில் சிறுமியை உயிருடன் மீட்டனர்.
மீட்கப்பட்ட சிறுமி உடனடியாக போபாலில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிறுமி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்த நிலையில், அவர் சில நிமிடங்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.