பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள்: தமிழக அரசின் பரிந்துரையை ரத்துசெய்ய சுப்ரீம்கோர்ட்டு மறுப்பு


பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள்: தமிழக அரசின் பரிந்துரையை ரத்துசெய்ய சுப்ரீம்கோர்ட்டு மறுப்பு
x

16 ஆண்டுகள், தகவல் தெரிந்து 14 ஆண்டுகள் கழித்து ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டதால் ரிட் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

புதுடெல்லி,

சென்னையை சேர்ந்த துரை என்பவர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 'நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் தமிழக அரசின் பரிந்துரையை ரத்துசெய்ய வேண்டும்' என கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க தமிழக அரசு கடந்த 2006-ம் ஆண்டு பரிந்துரைத்தது. அதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 2008-ம் ஆண்டு குறவன் பழங்குடியின நலச் சங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், பரிந்துரை கடிதம் அளிக்கப்பட்டு 16 ஆண்டுகள், தகவல் தெரிந்து 14 ஆண்டுகள் கழித்து ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டதால் ரிட் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.கே.கவுல், அபய் எஸ்.ஒகா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் ஜி.எஸ்.மணி ஆஜராகி மனுவில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வாதிட்டார்.

வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் தமிழக அரசின் பரிந்துரையை ரத்து செய்யக்கோரிய மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க மறுத்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


Next Story