பகுதி நேர வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.8¾ லட்சம் மோசடி
சிவமொக்காவில் பகுதி நேர வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.8¾ லட்சம் மோசடி செய்த சம்பவம் நடந்துள்ளது.
சிவமொக்கா-
சிவமொக்கா டவுனை சேர்ந்த 29 வயது வாலிபருக்கு டெலிகிராம் செயலி மூலம் பகுதி நேர வேலை வழங்குவதாக கூறி குறுஞ்செய்தி வந்தது. அந்த குறுஞ்செய்தியில் உள்ள வீடியோக்களை பார்த்தால் கமிஷன் தருவதாக கூறப்பட்டு இருந்தது. நாங்கள் அனுப்பும் இணையதள லிங்கில் சென்று வீடியோக்களுக்கு மதிப்பீடு செய்தால் அதற்கு உரிய கூடுதல் கமிஷன் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து அந்த வாலிபர் அந்த லிங்கில் சென்று 3 வீடியோக்களை பார்த்து மதிப்பெண் வழங்கி உள்ளார். அதன்மூலம் அவருக்கு ரூ.1,500 கமிஷன் வழங்கப்பட்டது. பின்னர் இந்த பகுதி நேர வேலையில் தொடர ரூ.20 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை நம்பிய வாலிபர் ரூ.20 ஆயிரத்தை முன்பணமாக செலுத்தினார். அதன்பின்னர் வாலிபர் தொடர்ந்து வீடியோக்களுக்கு மதிப்பெண் வழங்கினார். அதன்படி அவருக்கு ரூ.25 ஆயிரம் கமிஷனாக கிடைத்தது. பின்னர் அவர் பல்வேறு தவணைகளாக ரூ.8 லட்சத்தை செலுத்தினார். ஆனால் அவருக்கான கமிஷன் தொகை வரவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாலிபர் இதுகுறித்து சிவமொக்கா சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.