அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம்


அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம்
x

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற 5-வது உத்தரவாத்தை மங்களூரு பிரசார கூட்டத்தில் ராகுல்காந்தி அறிவித்துள்ளார்.

பெங்களூரு:-

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

மீனவர்களுடன் கலந்துரையாடல்

இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் கர்நாடகத்தில் அனல் பறக்கும பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோல், அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கர்நாடகத்தில் பிரசாரம் செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 நாட்கள் இங்கு சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். இந்த நிலையில் அவர் மீண்டும் நேற்று கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். உடுப்பி மாவட்டம் காபுவில் மீனவர்களுடன் அவர் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:-

மீனவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மீன் பிடிப்பதற்கான செலவு அதிகரித்துவிட்டது. அதனால் தான் மீன் விலை உயர்ந்துவிட்டது. அதனால் தான் உங்களுக்கு உதவி செய்ய விரும்புகிறோம். சில சலுகைகளை வழங்குகிறோம். மூன்று விஷயங்களை செய்ய நான் விரும்புகிறேன். மீனவர்களுக்கு ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு வழங்கப்படும். உங்களுக்கு ரூ.1 லட்சம் வரை வட்டியில்லா கடன் அளிக்கப்படும். ஒரு நாளைக்கு 500 லிட்டர் டீசலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.25 மானியம் வழங்கப்படும்.

முதல்-மந்திரி பதவி

இந்த வாக்குறுதிகள் அனைத்தும் காங்கிரஸ் ஆட்சியில் முதலாவது மந்திரிசபை கூட்டத்திலேயே நிறைவேற்றப்படும். காங்கிரஸ் வெறும் வாக்குறுதிகளை மட்டும் அளிக்காது, அதை முதல் நாளில் இருந்து அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும். இந்த தேர்தல் 2 கொள்கைகளுக்கு இடையே நடைபெறும் தேர்தல். காங்கிரஸ் கட்சி ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பாடுபடுகிறது.

தற்போது கர்நாடகத்தில் உள்ள பா.ஜனதா அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அல்ல. காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சியை அமைத்தனர். அதாவது பணத்தால் பா.ஜனதாவினர் ஆட்சியை அமைத்து கொண்டனர். இந்த உண்மை கர்நாடகத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். முதல்-மந்திரி பதவி ரூ.2,500 கோடிக்கு விற்பனை செய்யப்படுவதாக பா.ஜனதாவை சேர்ந்த ஒருவரே கூறினார்.

உதவி என்ஜினீயர்கள்

ஒப்பந்ததாரர்கள் சங்கம் இந்த ஆட்சியில் 40 சதவீத கமிஷன் கேட்பதாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியது. இந்த ஆட்சியின் ஊழலை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். ஆசிரியர்கள், போலீசார், உதவி என்ஜினீயர்கள் நியமனத்தில் ஊழல் நடந்துள்ளது. அந்த ஊழல் பணத்தை தற்போது தேர்தலில் செலவழிக்கிறார்கள். அந்த பணம் மக்களுடையது. உங்களின் பணத்தால் பயனடைகிறவர்கள் யார்?. உங்களின் நலனுக்காக அந்த பணம் செலவு செய்வது இல்லை. பெரும் பணக்கார நண்பர்களுக்கு உங்களின் பணம் எடுத்து கொடுக்கப்படுகிறது. அரசின் நிதி மக்களுக்கு சென்றடைவதை காங்கிரஸ் உறுதி செய்யும்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

இலவசமாக பயணிக்கலாம்

இதையடுத்து மங்களூருவில் நடந்த காங்கிரசின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி கலந்துகொண்டு பேசியதாவது:-

கா்நாடகத்தில் நாங்கள் ஏற்கனவே 4 உத்தரவாத திட்டங்களை அறிவித்து இருக்கிறோம். அத்துடன் இப்போது 5-வதாக ஒரு உத்தரவாத திட்டத்தை அறிவிக்கிறேன். அதாவது கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம். இந்த 5 உத்தரவாத திட்டங்களையும் அமல்படுத்த முதலாவது மந்திரிசபை கூட்டத்திலேயே முடிவு எடுக்கப்படும்.

5 உத்தரவாத திட்டங்கள்

காங்கிரஸ் உத்தரவாத திட்டங்களை செயல்படுத்தாது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும். நாங்கள் இந்த 5 உத்தரவாத திட்டங்களையும் அமல்படுத்துவோம். அதன் பிறகு இதை நாடு முழுவதும் நீங்கள் அமல்படுத்த தயாரா?. கா்நாடகத்தில் திருட்டுத்தனமாக பா.ஜனதா ஆட்சி அமைத்தது. திருட்டுத்தனம் செய்வது பா.ஜனதாவுக்கு பழக்கமாக மாறிவிட்டது.

அரசாக இருந்தாலும் சரி, எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் சரி, ஒப்பந்தமாக இருந்தாலும் சரி, சர்க்கரை ஆலையாக இருந்தாலும் சரி எல்லாவற்றையும் பா.ஜனதாவினர் திருடுகிறார்கள். தற்போது உள்ள பா.ஜனதா ஊழல் அரசு உங்களுக்கு தேவையா?. எல்லாவற்றிலும் 40 சதவீத கமிஷன் பெறுகிறார்கள். மடங்களுக்கு வழங்கும் நிதியிலும் 30 சதவீத கமிஷன் பெற்றுள்ளனர்.

தொழில்கள் நாசமாகிவிட்டன

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,100 ஆக உயர்ந்துவிட்டது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜி.எஸ்.டி. வரியால் சிறிய மற்றும் நடுத்தர தொழில்கள் நாசமாகிவிட்டன. ஏழைகளின் பணத்தை பறித்து பணக்காரர்களுக்கு கொடுத்துள்ளனர். நாட்டில் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. 40 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே சென்றுவிட்டனர்.

நாட்டின் ஒரு சதவீதம் பேரிடம் 40 சதவீத சொத்துக்கள் உள்ளன. 90 லட்சம் சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மூடப்பட்டுவிட்டன. இது தான் பா.ஜனதாவின் சாதனை. 40 சதவீத கமிஷன், வேலையின்மை, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு போன்றவை தான் இந்த பா.ஜனதா அரசின் சாதனை ஆகும். ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக பிரதமர் மோடி கூறினார். ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வதாக உறுதியளித்தார். இந்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றினாரா?.

யாராலும் தடுக்க முடியாது

அதானி நிறுவனத்தில் உள்ள ரூ.20 ஆயிரம் கோடி யாருடையது என்று நான் கேட்டேன். எனது எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்துவிட்டனர். பிரதமர் மோடி, ஏழைகள், இளைஞர்கள், பெண்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது இல்லை. ஆனால் அதானியின் அனைத்து கோரிக்கைகளையும் அவர் நிறைவேற்றுகிறார். இந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 150 தொகுதிகளில் வெற்றி பெறும். இதை யாராலும் தடுக்க முடியாது. 40 சதவீத கமிஷன் பா.ஜனதாவுக்கு 40 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

காங்கிரஸ் கட்சி ஏற்கனவே வீடுகளுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 ஊக்கத்தொகை, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000 மற்றும் குடும்ப அட்டைகளுக்கு தலா 10 கிலோ ரேஷன் அரிசி வழங்கப்படும் என்றும், இந்த முக்கிய வாக்குறுதிகள் முதலாவது மந்திரிசபை கூட்டத்திலேயே நிறைவேற்றப்படும் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story