இந்தியா வந்தடைந்தார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்


இந்தியா வந்தடைந்தார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்
x
தினத்தந்தி 25 Jan 2024 4:23 PM IST (Updated: 25 Jan 2024 4:29 PM IST)
t-max-icont-min-icon

பிரான்ஸ் அதிபர் மேக்ரான் நாளை டெல்லி கடமை பாதையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்கிறார்.

புதுடெல்லி,

டெல்லியில் நாளை (வெள்ளிக்கிழமை) குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் பிரமாண்ட அணிவகுப்பு நடத்தப்படும். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவில் வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பிரான்ஸ் அதிபர் மேக்ரான் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

இந்நிலையில், குடியரசு தின விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு வந்த அதிபர் மேக்ரானை மத்திய மந்திரி ஜெய்சங்கர் வரவேற்றார்.

முன்னதாக அதிபர் மேக்ரான் பிரதமர் மோடியுடன் சாலை பேரணியில் பங்கேற்கிறார். இதனை தொடர்ந்து, ஜெய்ப்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இரவு 7:30 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்து வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி உள்ளிட்ட விவகாரங்களில், இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

இது தவிர ஜெய்ப்பூரில் உள்ள ஆம்பர் கோட்டை, ஜந்தர் மந்தர் மற்றும் ஹாவா மகால் ஆகிய இடங்களுக்கு மேக்ரான் செல்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் இரவு 8.50 மணியளவில் டெல்லிக்கு புறப்பட்டு செல்லும் மேக்ரான் நாளை டெல்லி கடமை பாதையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்கிறார்.

1 More update

Next Story