மணிப்பூரில் புதிதாக கலவரம்; 3 கிராம தன்னார்வலர்கள் படுகொலை
மணிப்பூரில் புதிதாக ஏற்பட்ட கலவரத்தில் கிராம தன்னார்வலர்கள் 3 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டு உள்ளனர்.
இம்பால்,
மணிப்பூரில் மெய்தி சமூகம் மெஜாரிட்டியாக உள்ளது. இந்நிலையில், அந்த சமூகத்திற்கும் மற்றும் பழங்குடி பிரிவினருக்கும் இடையே கடந்த மே மாதம் 3-ந்தேதி கலவரம் வெடித்தது. இந்த மோதலில் பொதுமக்களில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், பலர் காயமடைந்தும் உள்ளனர். இந்த கலவரம் ஒரு மாதத்திற்கும் கூடுதலாக நீடித்து வருகிறது.
தொடர்ந்து அடிக்கடி வன்முறை பரவி வரும் சூழலில், மக்கள் அச்சம் மற்றும் பதற்றத்துடனேயே உள்ளனர். இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். ஆசிரியர்கள், மாணவர்கள் என அன்றாட பணியில் ஈடுபட்டு இருந்தவர்கள் கூட ஆயுதங்களை ஏந்திய சூழல் காணப்படுகிறது.
இந்த நிலையில், மணிப்பூரில் பிஷ்ணுப்பூர் மாவட்டத்தில் கொய்ஜுமந்தபி கிராமத்தில் புதிதாக வன்முறை பரவியது. இதில், அந்த பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த பதுங்கு குழியை பாதுகாப்பதற்காக கிராமவாசிகளால் நியமிக்கப்பட்டு இருந்த தன்னார்வலர்களுக்கும், ஆயுதமேந்திய மர்ம நபர்களுக்கும் இடையே நேற்று (ஞாயிற்று கிழமை) துப்பாக்கி சண்டை ஏற்பட்டது.
இந்த கலவரத்தில் கிராம தன்னார்வலர்கள் 3 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டு உள்ளனர். 5 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்களில் ஒரு தம்பதி படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சூழலில், குகி பழங்குடியினரின் 2 கிளை அமைப்புகள் தேசிய நெடுஞ்சாலை 2-ல் நடத்திய சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது என நேற்று (ஞாயிற்று கிழமை) கூறியது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கேட்டு கொண்டதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.