மங்களூருவில் இருந்து ஹஜ் பயண சேவை ரத்து


மங்களூருவில் இருந்து  ஹஜ் பயண சேவை ரத்து
x
தினத்தந்தி 6 May 2023 6:45 PM GMT (Updated: 6 May 2023 6:46 PM GMT)

மங்களூருவில் இருந்து ஹஜ் விமான சேவை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மங்களூரு-

மங்களூருவில் இருந்து ஹஜ் விமான சேவை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

'ஹஜ் பயணம்'

முஸ்லிம்கள் 'ஹஜ்' புனித பயணம் மேற்கொள்வது வழக்கம். இந்தநிலையில் கொரோனாவிற்கு பின் கடந்த ஆண்டு ஹஜ் பயணம் தொடங்கப்பட்டது. அதற்காக ஹஜ் பயணம் செய்பவர்கள் அங்கு செல்லுவதற்கு விண்ணப்பித்து இருந்தனர்.

ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் மங்களூரு விமான நிலையத்திலிருந்து நேரடியாக பயணிக்க வசதி வழங்கப்பட்டது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் பெங்களூரு, மங்களூரு, கோவா மற்றும் ஐதராபாத் ஆகிய விமான நிலையங்களில் இருந்து செல்வது வழக்கம்.

ரத்து

இந்த நிலையில் இந்திய ஹஜ் கமிட்டி நாட்டில் உள்ள பல ஹஜ் கமிட்டி பரிசோதனை மையங்களை ரத்து செய்தது. அதில் மங்களூரு மையமும் ஒன்று. இதனால் தட்சிண கன்னடா, உடுப்பி, சிக்கமகளூரு, குடகு மற்றும் ஹாசன் மாவட்ட ஹஜ் பயணிகள் சிரமம் அடைந்து உள்ளனர். இந்த மாவட்டங்களைச் சேர்ந்த ஹஜ் பயணிகள் பெங்களூரு, சென்னை, கண்ணூர் மற்றும் கொச்சி ஆகிய இடங்களில் தேர்வு செய்யுமாறு இந்திய ஹஜ் குழு அறிவித்து உள்ளது.

கடந்த ஆண்டு, கொரோனா தொற்று காரணமாக மங்களூருவில் இருந்து நேரடியாக ஹஜ் செல்ல அனுமதிக்கப்படவில்லை. எனவே, இந்த முறை மாநில ஹஜ் குழு அகில இந்திய ஹஜ் குழுவிடம், மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹஜ் பயணம் செல்ல அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தது. இருப்பினும், மங்களூரு விமான நிலையத்தில் இருந்து ஹஜ் பயணம் செல்ல ரத்து செய்யப்பட்டுள்ளது.

நேரடி விமான சேவை

இதுகுறித்து ஹஜ் பயணம் செல்பவர்கள் கூறுகையில், 'பெங்களூரு, கண்ணூர் அல்லது கொச்சியில் இருந்து அந்த இடங்களுக்கு முன்கூட்டியே செல்ல வேண்டியிருப்பதால் விமானத்தில் ஏறுவது கடினம். இதனால் தங்களுக்கும், தங்களைப் பார்க்க வரும் உறவினர்களுக்கும் தங்கும் பிரச்சினை ஏற்படுவதாகவும், அதிக செலவு ஏற்படுவதாகவும், இதனால் இந்திய ஹஜ் கமிட்டி இந்த பிரச்சினையை பரிசீலித்து மங்களூருவில் இருந்து நேரடியாக ஹஜ் பயணம் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story