இந்திய கட்டிட கலையை பார்த்து ஜி-20 நாடுகள் சபை பிரதிநிதிகள் வியப்பு


இந்திய கட்டிட கலையை பார்த்து ஜி-20 நாடுகள் சபை பிரதிநிதிகள் வியப்பு
x

ஹம்பி நகரில் உள்ள லோட்டஸ் அரண்மனையை சுற்றிப்பார்த்த ஜி-20 நாடுகள் சபை பிரதிநிதிகள் இந்திய கட்டிட கலையை பார்த்து வியந்தனர். மேலும் புராதன இடங்களை பாதுகாக்கும் உணர்வை தூண்டுவதாகவும் தெரிவித்தனர்.

பெங்களூரு:-

ஜி-20 நாடுகள் சபை

கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டத்தில் உள்ள யுனெஸ்கோவால் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்ட ஹம்பி நகரில் ஜி-20 நாடுகள் சபையில் கலாசார செயல் குழு கூட்டம் கடந்த 9-ந் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தின் 3-வது நாள் கூட்டம் நேற்று ஹம்பியில் நடந்தது. கூட்டத்தில் புராதன இடங்கள், கலாசாரத்தை பறைசாற்றும் பகுதிகளை பாதுகாப்பது குறித்தும், மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. முன்னதாக ஜி-20 நாடுகள் சபை பிரதிநிதிகள் ஹம்பி நகரில் உள்ள பாரம்பரிய இடங்களை சுற்றிப்பார்த்தனர்.

அப்போது அவர்கள் அங்கிருந்த கம்பீரமான சிற்பங்கள், வண்ணமயமான அரண்மனைகள், அங்குள்ள சுவர்கள், சின்னங்கள், கலாசார பொருட்களைப் பார்த்து வியந்தனர். குறிப்பாக அவர்கள் லோட்டஸ் மகாலை பார்த்தும், அங்குள்ள நுண்ணிய வேலைப்பாடுகள் நிறைந்த கட்டிடக் கலையை பார்த்தும் மெய்சிலிர்த்துப் போயினர். இந்தியர்களின் கட்டிடக்கலை திறமையை வெளிக்காட்டும் ஒரு மைல் கல்லாக லோட்டஸ் மகால் விளங்குவதாக அவர்கள் கூறினர்.

புராதன இடங்கள்

மேலும் அவர்கள் ஜி-20 நாடுகள் சபை கூட்டம் நடப்பதன் மூலம் ஹம்பி நகரம் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது என்றும், கலாசாரம், பாரம்பரியம் மற்றும் புராதன இடங்களை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வை ஹம்பி நகரம் தூண்டுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இன்று(புதன்கிழமை) ஹம்பியில் 4-வது நாள் கூட்டம் நடக்கிறது. இதில் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டு பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிப்பார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.


Next Story