ஜி-20 உச்சி மாநாடு; டெல்லி வான்வெளியில் போர் விமானங்கள் உதவியுடன் தீவிர கண்காணிப்பு


ஜி-20 உச்சி மாநாடு; டெல்லி வான்வெளியில் போர் விமானங்கள் உதவியுடன் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 30 Aug 2023 6:05 PM GMT (Updated: 31 Aug 2023 1:07 AM GMT)

ஜி-20 உச்சி மாநாட்டை முன்னிட்டு, டெல்லி வான்வெளியை இந்திய விமான படையின் போர் விமானங்கள் பாதுகாக்கும் பணியில் ஈடுபட உள்ளன.

புதுடெல்லி,

நடப்பு ஆண்டிற்கான ஜி-20 உச்சி மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்தி வருகிறது. இதில், 20 உறுப்பு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் பிற நாடுகளை சேர்ந்த குழுவினரும் இந்தியாவுக்கு வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.

டெல்லியில், வருகிற செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதனால், டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்திய விமான படையை சேர்ந்த ரபேல் உள்ளிட்ட போர் விமானங்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.

பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கும் உயர்மட்ட கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்குவதற்காக, டெல்லி வான்வெளி பகுதியின் முக்கிய இடங்களில், புதிய வான் பாதுகாப்பு ஏவுகணை திட்டங்களை நிறுத்துவதுடன், வான்வழியேயான எச்சரிக்கை அமைப்புகளையும் நிறுத்தி பாதுகாப்பை மேற்கொள்கின்றனர்.

இவற்றுடன் சேர்த்து, ஆளில்லா விமானங்களை அழிக்கும் அமைப்புகளும் பல்வேறு இடங்களில் நிறுவப்படுகின்றன.

இதன்படி, அனைத்து பாதுகாப்பு முகமைகளுடனும் இணைந்து இந்திய விமான படை ஒருங்கிணைந்து செயல்படும். ஏதேனும் வான்வழி அச்சுறுத்தல் ஏற்பட்டால் அவற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.


Next Story