ஜி20 மாநாடு: பத்திரிகையாளர்களுக்கு வைபை வசதியுடன் அரங்குகளில் பிரமாண்ட ஏற்பாடு


x
தினத்தந்தி 9 Sep 2023 10:35 AM GMT (Updated: 9 Sep 2023 10:36 AM GMT)

ஜி20 மாநாடு குறித்து செய்தி சேகரிக்க வந்துள்ள வெளிநாடு மற்றும் உள்ளூர் செய்தியாளர்களுக்கு பாரத் மண்டபத்தில் பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு டெல்லியில் இன்று தொடங்கியது. டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் ஜி20 உச்சிமாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்கியுள்ளது. அந்த வகையில் பிரதமர் மோடி துவக்க உரையாற்றி ஜி20 உச்சிமாநாட்டை தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் ஜி20 மாநாடு குறித்து செய்தி சேகரிக்க வந்துள்ள வெளிநாடு மற்றும் உள்ளூர் செய்தியாளர்களுக்கு பாரத் மண்டபத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஊடகவியலாளர்கள் மற்றும் செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்களுக்கு இரண்டு தளங்களில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

அரங்குகளுக்கு பிரம்மபுத்திரா, யமுனா, கங்கா, கோதாவரி என இந்திய நதிகளின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தளத்திலும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்து செய்தி சேகரிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் வைபை வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள பத்திரிக்கையாளர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு தலைவர்கள் பங்கேற்பதால் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க வந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான வசதிகள், விரும்பும் உணவு வகைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாட்களுக்கு பத்திரிக்கையாளர்கள் இந்த அரங்கிலிருந்து செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர்.


Next Story