மணிப்பூரில் பாதுகாப்பு படையினரை முற்றுகையிட்ட கும்பல்; வேறு வழியின்றி 12 பயங்கரவாதிகள் விடுவிப்பு


மணிப்பூரில் பாதுகாப்பு படையினரை முற்றுகையிட்ட கும்பல்; வேறு வழியின்றி 12 பயங்கரவாதிகள் விடுவிப்பு
x

மணிப்பூரில் பாதுகாப்பு படையினரை பெண்கள் உள்ளிட்ட 1,500-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் முற்றுகையிட்ட நிலையில், வேறு வழியின்றி தளபதி உள்பட 12 பயங்கரவாதிகள் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

இம்பால்,

மணிப்பூரில் மெய்தி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினருக்கும் இடையே ஒரு மாத காலத்திற்கும் மேலாக மோதல் ஏற்பட்டு தொடர்ந்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வன்முறையால், அப்பாவி பொதுமக்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் புலம்பெயர்ந்து வேறிடங்களுக்கு தப்பி சென்றனர்.

இந்த வன்முறை எதிரொலியாக பள்ளி, கல்லூரி உள்ளிட்ட இடங்கள் தாக்குதலில் சேதமடைந்தன. இணையதள சேவை துண்டிக்கப்பட்டு உள்ளது. எனினும், வன்முறை அவ்வப்போது நடந்து வருகிறது. ஆயுத கிடங்கில் இருந்த ஆயுதங்கள், வெடி பொருட்கள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் கும்பலாக வந்து அள்ளி சென்றனர். அவற்றை திருப்பி ஒப்படைக்க கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.

தொடரும் வன்முறையால் பதுங்கு குழியில் பாதுகாப்புக்காக மக்கள் பதுங்கி உள்ளனர். இந்த நிலையில், மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் காங்லெய் யவோல் கன்னா லப் என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் 12 பேரை பாதுகாப்பு படையினர் நேற்றிரவு கைது செய்தனர்.

அவர்களை வாகனங்களில் அழைத்து சென்றனர். அப்போது, பெண்கள் தலைமையிலான 1,500-க்கும் மேற்பட்டோர் கும்பலாக சென்று பாதுகாப்பு படையினரை முற்றுகையிட்டனர். பின்னர் படையினரை முன்னேறி செல்ல விடாமல் தடுத்தது பரபரப்பு ஏற்படுத்தியது.

மணிப்பூரில் ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படை பிரிவை சேர்ந்தவர்கள், உளவு தகவலை அடிப்படையாக கொண்டு நேற்றிரவு இம்பால் கிழக்கு மாவட்டத்திற்கு சென்று அந்த பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்து சோதனையிட்டனர்.

இதில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் போர் சார்ந்த கருவிகளை படையினர் கைப்பற்றினர். அந்த பயங்கரவாத அமைப்பின் தளபதி மொய்ராங்தெம் தம்பா என்ற உத்தம் உள்பட 12 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 2015-ம் ஆண்டு 6-வது படை பிரிவை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் முக்கிய பங்கு வகித்தவர் உத்தம் ஆவார்.

எனினும், அவரை கைது செய்த தகவல் அறிந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் திரண்டு வந்து படையினரை தடுத்து முற்றுகையிட்டதில், வேறு வழியின்றி அவர்களை உள்ளூர் தலைவர்களிடம் திரும்ப ஒப்படைக்கும் சூழல் ஏற்பட்டது. தளபதி உத்தம் உள்பட 12 பேரையும் அவர்களிடம் விட்டு, விட்டு கைப்பற்றிய ஆயுதங்களுடன் ராணுவம் வெளியேறியது.

வேறு பாதிப்பு எதுவும் நடந்து விட கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

மணிப்பூரில் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரித்து அமைதி மற்றும் ஸ்திர தன்மை ஏற்பட உதவிடும்படி மணிப்பூர் மக்களிடம் பாதுகாப்பு படையினர் வேண்டுகோளாக கேட்டு கொண்டு உள்ளனர். முதல்-மந்திரி பைரன் சிங் தலைமையிலான அரசும், மக்கள் அமைதி காக்கும்படி தொடர்ந்து கேட்டு கொண்டு உள்ளது.


Next Story