இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தலுக்கு தடை - கவுகாத்தி ஐகோர்ட்டு உத்தரவு


இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தலுக்கு தடை - கவுகாத்தி ஐகோர்ட்டு உத்தரவு
x

இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தலுக்கு தடை விதித்து கவுகாத்தி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கவுகாத்தி,

மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவருமான பிரிஜ் பூஷணை கைது செய்ய வலியுறுத்தி, டெல்லி ஜந்தா் மந்தா் பகுதியில் வினேஷ் போகாட், சங்கீதா போகாட், சாக்ஷி மாலிக், சத்யவா்த் காடியான் உள்ளிட்ட மல்யுத்த வீரா், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவா்களின் கோரிக்கைகள் தொடா்பாக மத்திய அரசு அளித்த வாக்குறுதியை ஏற்று, அவா்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.

பாலியல் தொந்தரவு குற்றம் சாட்டப்பட்ட இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன், கடந்த மார்ச் மாதத்துடன் தனது மூன்றாவது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தல் மே மாதம் 7 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்பின் இந்திய மல்யுத்த சம்மேளன விவகாரங்களை சமாளிப்பதற்கும், 45 நாட்களுக்குள் புதிய தேர்தல்களை நடத்துவதற்கும் இரண்டு உறுப்பினர் அடங்கிய குழுவை நியமித்தது. இதனையடுத்து இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 4 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்திருந்தது. ஆனால் தற்பொழுது, தேர்தலை ஜூலை 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து கமிட்டித் தலைவர் பூபேந்தர் சிங் பஜ்வா அறிவித்தார்.

இந்த நிலையில், ஜூலை 11-ம் தேதி நடைபெற இருந்த இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தலுக்கு தடை விதித்து வழக்கு விசாரணையை ஜூலை 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்து கவுகாத்தி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தேர்தலை எதிர்த்து அசாம் மல்யுத்த சங்கம் தாக்கல் செய்த மனுவில் கவுகாத்தி ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.


Next Story