சீனாவுடனான மோதல்: 'நாம் பின்வாங்கப்போவதில்லை' என பிபின் ராவத் கூறினார் - அஜித் தோவல்


சீனாவுடனான மோதல்: நாம் பின்வாங்கப்போவதில்லை என பிபின் ராவத் கூறினார் - அஜித் தோவல்
x

Image Courtesy: dnaindia.com

இந்தியாவின் முதல் முப்படைகளின் தலைமை தளபதியான பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

டெல்லி,

இந்தியாவின் முதல் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் கடந்த ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.

இந்த கோர விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், பிரிகேடியர் எல்.எஸ்.லிட்டர், லெப்டினன்ட் கர்னல் ஹர்ஜிந்தர் சிங், நாயக் குருசேவக் சிங், நாயக் ஜிதேந்திர குமார், லான்ஸ் நாயக் சாய் தேஜா, லான்ஸ் நாயக் விவேக் குமார், ஹவில்தார் சத்பால் ராய், விங் கமாண்டர் பிரித்வி சிங் சவுகான், ஸ்குட்ரான் லீடர் குல்தீப் சிங், ஜூனியர் வாரன்ட் ஆபீஸர் ராணா பிரதாப் தாஸ், ஜூனியர் வாரன்ட் ஆபீஸர் பிரதீப் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட குரூப் கேப்டன் வருண் சிங் பெங்களூரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

இந்தநிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் முதலாமாண்டு நினைவு தினம் கடந்த 8-ம் தேதி அனுசரிக்கப்பட்டது.

அந்த வகையில், பிபின் ராவத்தின் முதலாமாண்டு நினைவு தினத்தில் அவர் தொடர்பான புத்த வெளியிட்டு விழா டெல்லியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, 2017-ம் ஆண்டு டோக்லாம் (பூட்டான்) எல்லையில் சீனாவுடன் நமக்கு கடுமையான சூழ்நிலை ஏற்பட்டது எனக்கு நினைவிருக்கிறது.

அந்த சமயத்தில், எனது வீட்டில் இரவு 9 மணி 9.30 மணியளவில் ஜெனரல் பிபின் ராவத் தான் ஆலோசனை கூட்டங்களை நடத்துவார். அந்த சமயத்தில் அவர் ராணுவ நடவடிக்கைகளின் தலைமை இயக்குனராக செயல்பட்டார்.

நாங்கள் அனைவரும் ஆலோசனைகளை மேற்கொள்வோம். பிபின் ராவத் மிகவும் நெஞ்சுரம் மிக்கவராக இருந்தார். மேலும், முடிவெடிப்பதில் ஒருபோதும் எந்த தயக்கமும் காட்டியதில்லை.

நாம் உறுதியாக உள்ளோம் நாம் பின்வாங்கப்போவதில்லை. நாம் அங்கு நிலைகொண்டு சீன படைகளை பின்வாங்க செய்வோம் என்று பிபின் ராவத் கூறினார்.

மிகவும் கடுமையான 75 நாட்களுக்கு பின் சீன படைகள் பின்வாங்கின. மிகச்சிறந்த தேசபக்தன், தொலைநோக்கு சிந்தனை கொண்ட, யுக்திகளை சிந்திக்கக்கூடிய நபரை நாடு இழந்துவிட்டது.

சிறந்த ஜெனரலை இந்திய ராணுவம் இழந்துவிட்டது. இந்திய ராணுவத்தின் சிறந்த தலைவர். மக்கள் மிகப்பெரிய அன்பு வைத்திருந்த ஹிரோவை நாடு இழந்துவிட்டது. அவரது இழப்பு அனைவருக்குமான தனிப்பட்ட இழப்பு' என்றார்.


Next Story