காஷ்மீர் கவர்னர் ஆகிறாரா குலாம் நபி ஆசாத்..?


காஷ்மீர் கவர்னர் ஆகிறாரா குலாம் நபி ஆசாத்..?
x

Image Courtacy: PTI

குலாம் நபி ஆசாத் காஷ்மீரின் அடுத்த துணைநிலை கவர்னர் ஆகிறார் என்று வெளியான தகவலுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

ஸ்ரீநகர்,

காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் முன்னாள் தலைவர்களில் ஒருவருமான குலாம் நபி ஆசாத், அந்தக் கட்சியில் இருந்து விலகியபிறகு கடந்த ஆண்டு ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியை தொடங்கினார்.

அதன் நிறுவன தினத்தையொட்டி ஸ்ரீநகரில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் குலாம் நபி ஆசாத் பேசியதாவது:-

கவர்னர்

'நான் காஷ்மீரின் அடுத்த துணைநிலை கவர்னர் ஆகப்போகிறேன் என்று புதிதாக ஒரு வதந்தி உலாவருகிறது.

அதிகமாக செயல்படும் வதந்திக்கூடங்களை மக்கள் நம்ப வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். நான் துணைநிலை கவர்னர் ஆகும் திட்டம் எதுவும் இல்லை.

நான் காஷ்மீர் மக்களுக்கு சேவையாற்றவே இங்கு வந்தேனே தவிர, வேலை தேடி அல்ல.

நான் காஷ்மீருக்கு 2005-ம் ஆண்டு முதல்-மந்திரியாக வந்தபோது, மத்திய அரசின் 2 முக்கிய துறைகளை விட்டுவிட்டுத்தான் வந்தேன். வேலையில்லாமல் ஒன்றும் அல்ல.

மாபெரும் தவறு

இன்று காஷ்மீரின் 2 முக்கிய பிரச்சினைகளாக வேலைவாய்ப்பின்மையும், விலைவாசி உயர்வும் இருக்கின்றன. இங்குள்ள சுற்றுலாத்துறை வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வதன் மூலம் வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியும்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியது மத்திய அரசு செய்த மாபெரும் தவறு.

காஷ்மீரில் போதைப்பொருள் பயன்பாடு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு பலர் கோடீஸ்வரர்கள் ஆகியிருக்கிறார்கள். அவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும்.'

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story