வீட்டு வேலைக்கு அழைத்துச் சென்று சித்ரவதை.. பூட்டிய வீட்டுக்குள் 4 நாட்களாக தவித்த சிறுமி மீட்பு
வீட்டின் உரிமையாளர்கள் மின் கட்டணத்தை செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது.
நாக்பூர்:
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் வீட்டு வேலைக்கு அழைத்து வந்த சிறுமியை சித்ரவதை செய்ததுடன், வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாக்பூர் அதர்வா நகரி சொசைட்டியில் உள்ள ஒரு குடும்பத்தினர் பெங்களூருவைச் சேர்ந்த 12 வயது சிறுமியை வீட்டு வேலைக்காக அழைத்து வந்துள்ளனர். வீட்டு வேலையில் அந்த சிறுமி ஏதேனும் தவறு செய்தால் தண்டனை கொடுத்துள்ளனர். சிகரெட்டால் சூடு வைப்பது, சூடான பாத்திரங்களால் சூடு வைப்பது என அவர்களின் கொடுமை தொடர்ந்துள்ளது.
இந்நிலையில் வீட்டின் உரிமையாளர்கள் பெங்களூருவுக்கு சென்றபோது வேலைக்கார சிறுமியை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இதனால் 4 நாட்களாக வீட்டில் சிறுமி தனியாக சிக்கித் தவித்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த சிறுமி அழுதுகொண்டே ஜன்னல் வழியாக வெளியேற முயற்சி செய்துள்ளார். அழுகை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சிறுமியை அந்த வீட்டில் இருந்து மீட்டு உணவு கொடுத்துள்ளனர். பின்னர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அந்த வீட்டின் உரிமையாளர்கள் மின் கட்டணத்தை செலுத்தாமல் சென்றதால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. இதனால் வீட்டில் இருந்த சிறுமி இரவு நேரத்தில் இருட்டறையில் பயந்துபோய் இருந்ததாக பக்கத்து வீட்டில் உள்ள ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அவரது உடலில் பல இடங்களில் தீக்காயங்கள் இருந்தது தெரியவந்ததாக சமூக ஆர்வலர் சீத்தல் பாட்டில் கூறியுள்ளார். சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை சித்ரவதை செய்ததாக ஒருவரை கைது செய்துள்ளனர்.