சொத்து தகராறில் சிறுமியை வீட்டின் மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்ட கொடூரம் - அதிர்ச்சி வீடியோ


சொத்து தகராறில் சிறுமியை வீட்டின் மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்ட கொடூரம் - அதிர்ச்சி வீடியோ
x

சொத்து தகராறில் சிறுமியை வீட்டின் மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

டெல்லி,

தலைநகர் டெல்லியின் கரண் விஹர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் முனீஷ் என்ற நபர் வசித்து வருகிறார். அந்த நபருக்கும் அவரது அண்டை வீட்டாருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், முனீசுக்கும் அவரது அண்டை வீட்டாருக்கும் கடந்த வியாழக்கிழமை மாலை மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அண்டை வீட்டில் வசித்து வரும் 17 வயது சிறுமி வீட்டின் மாடியில் இருந்து முனீசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முனீஷ் சிறுமியின் கன்னத்தில் அறைந்துள்ளார். பின்னர், சிறுமியை வீட்டின் மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார்.

இதில், தெருவில் விழுந்த சிறுமிக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டது. காயத்தால் துடித்த சிறுமியை மீட்ட குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள முனீசை தீவிரமாக தேடி வருகின்றனர். வீட்டின் மாடியில் இருந்து சிறுமியை முனீஷ் தள்ளிவிடும் சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.


Next Story