காங்கிரசுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள்
பா.ஜனதா பொய் தொழிற்சாலை போன்று உள்ளது. காங்கிரசிற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:-
கர்நாடகத்தில் காங்கிரசுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று சித்தராமையா கேட்டுள்ளார்.
வாக்குறுதிகள்
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று தனது முதல் கட்ட பிரசாரத்தை தொடங்கினார். அவர் பெலகாவி மாவட்டம் கோகாக் தொகுதியில் நடைபெற்ற காங்கிரசின் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:-
நான் முதல்-மந்திரியாக இருந்தபோது காங்கிரஸ் கட்சி மக்களுக்கு வழங்கிய 165 வாக்குறுதிகளில் 158 வாக்குறுதிகளை நிறைவேற்றினேன். அன்ன பாக்கிய, கிருஷி பாக்கிய, பசு பாக்கிய உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அமல்படுத்தினேன். தற்போது உள்ள பா.ஜனதா கட்சி கடந்த தேர்தலின்போது 600 வாக்குறுதிகளை அளித்தது. அதில் வெறும் 5 வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியுள்ளது.
பொய் தொழிற்சாலை
கர்நாடக பா.ஜனதா ஆட்சியின் ஊழல் விண்ணை தொட்டுவிட்டது. ஒப்பந்ததாரர்கள் 40 சதவீதம் கமிஷன் கொடுத்தால் மட்டுமே அவர்களுக்கு பட்டுவாடா செய்யப்படுவதாக குற்றம்சாட்டினர். கர்நாடக வரலாற்றில் முதல் முறையாக ஒப்பந்ததாரர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இதுகுறித்து புகார் தொிவித்தனர். ஆனால் பிரதமர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அன்ன பாக்கிய திட்டத்தின் கீழ் குடும்ப உறுப்பினர்களுக்கு தலா 7 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை தொடங்கினேன். இதற்கு மத்திய அரசு அரிசி வழங்குவதாக பா.ஜனதாவினர் சொல்கிறார்கள். அப்படி என்றால் இந்த திட்டம் குஜராத், உத்தரபிரதேசத்தில் இல்லையே ஏன்?. பா.ஜனதாவினர் பொய் பேசிக்கொண்டு திரிகிறார்கள். பா.ஜனதா ஒரு பொய் தொழிற்சாலை போன்றது.
மீண்டும் ஒரு வாய்ப்பு
அவர்கள் கூறும் பொய்களுக்கு எல்லையே இல்லை. ஜெகதீஷ் ஷெட்டரை கட்சியை விட்டு வெளியே தள்ளிவிட்டுள்ளனர். எடியூரப்பாவை வலுக்கட்டாயமாக முதல்-மந்திரி பதவியில் இருந்து கீழே இறக்கினர்.
இந்த பா.ஜனதா அரசு அலிபாபாவும், 40 திருடர்களும் கும்பலை சேர்ந்தது. நாங்கள் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். அதனால் கர்நாடக மக்கள் காங்கிரசுக்கு மீண்டும் ஒரு முறை வாய்ப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.