அச்சமின்றி நிம்மதியாக வாழ்வதற்கான உரிமையை கொடுங்கள்- பில்கிஸ் பானு வேண்டுகோள்


அச்சமின்றி நிம்மதியாக வாழ்வதற்கான உரிமையை கொடுங்கள்- பில்கிஸ் பானு வேண்டுகோள்
x

Image Courtesy: PTI 

குற்றவாளிகளின் விடுதலை நீதியின் மீதான தனது நம்பிக்கையை அசைத்துவிட்டதாக பில்கிஸ் பானு தெரிவித்துள்ளார்.

ஆமதாபாத்,

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா சம்பவத்துக்கு பின், பில்கிஸ் பானு என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர். பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகளாக 11 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

கடந்த 14 ஆண்டுகளாக சிறையில் இருந்த அவர்களை கருணை அடிப்படையில் குஜராத் அரசு நேற்று முன்தினம் விடுதலை செய்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர்.

இந்த நிலையில் 11 பேர் விடுதலை குறித்து பில்கிஸ் பானு முதல் முறையாக பேசியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது:

எனது குடும்பத்தையும் எனது வாழ்க்கையையும் சீரழித்த 11 குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர் என்று நான் கேள்விப்பட்டபோது கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட அதிர்ச்சி என்னை மீண்டும் உலுக்கியது. எந்த பெண்ணின் நீதி இப்படி முடிவடையும்? நம் நாட்டில் உள்ள நீதிமன்றங்களை நான் நம்பினேன்.

இந்தக் குற்றவாளிகளின் விடுதலை என்னிடமிருந்து என் அமைதியைப் பறித்து, நீதியின் மீதான எனது நம்பிக்கையை அசைத்துவிட்டது. எனது சோகம், எனது நம்பிக்கையும் எனக்கானது மட்டுமல்ல, நீதிமன்றங்களில் நீதிக்காகப் போராடும் ஒவ்வொரு பெண்ணுக்கும் உரியது.

இவ்வளவு பெரிய அநீதியான முடிவை எடுப்பதற்கு முன், என் பாதுகாப்பை பற்றி யாரும் விசாரிக்கவில்லை. குஜராத் அரசிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன், தயவுசெய்து இந்த தீர்ப்பை நீக்குங்கள். அச்சமின்றி நிம்மதியாக வாழ்வதற்கான எனது உரிமையை எனக்குத் திரும்பக் கொடுங்கள். தயவு செய்து நானும் எனது குடும்பத்தினரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்துங்கள்.

இவ்வாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story