ஓட்டுக்காக இலவசம் அளிப்பது நிதிநிலைமையை சீரழித்து விடும் - வெங்கையா நாயுடு


ஓட்டுக்காக இலவசம் அளிப்பது நிதிநிலைமையை சீரழித்து விடும் - வெங்கையா நாயுடு
x

ஓட்டுக்காக இலவசம் அளிக்கும் கலாசாரம், மாநிலங்களின் நிதிநிலைமையை சீரழித்து விடும் என்று வெங்கையா நாயுடு கூறினார்.

புதுடெல்லி,

டெல்லியில், 2018 மற்றும் 2019-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த இந்திய செய்தி தொடர்பு அதிகாரிகளிடையே நேற்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார். இன்று (புதன்கிழமை) ஓய்வு பெறும் அவர், துணை ஜனாதிபதியாக பேசிய கடைசி உரை இதுவே ஆகும்.

வெங்கையா நாயுடு பேசியதாவது:- அரசுக்கும், மக்களுக்கும் இடையே செய்தி தொடர்பு அதிகாரிகள் பாலமாக இருக்க வேண்டும். ஜனநாயகத்தில், அரசின் கொள்கைகள் மற்றும் முன்னெடுப்புகள் குறித்து மக்களுக்கு அவரவர் தாய்மொழியில் உடனுக்குடன் செய்தி போய்ச்சேர வேண்டும்.

அதுபோல், மக்களின் எதிர்பார்ப்புகளையும், உணர்வுகளையும் அரசுக்கு உடனுக்குடன் அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்.

சமூக வலைத்தளங்களின் பெருக்கத்தால், 'உடனடி இதழியல்' என்ற போக்கு அதிகரித்து வருகிறது. இதனால், இதழியல் தர்மம் அழிந்து வருவது கவலைக்குரியது.

ஓட்டுகள் வாங்குவதற்காக அரசியல் கட்சிகள் இலவசங்களை அளித்து வருகின்றன. இந்த இலவச கலாசாரம், மாநிலங்களின் நிதிநிலைமையை சீரழித்து விடும்.

ஏழைகளுக்கும், உதவி தேவைப்படுவோருக்கும் அரசு நிச்சயம் உதவ வேண்டும். அதே சமயத்தில், சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

சாதாரண விவசாயி மகனாக இருந்து நாட்டின் 2-வது உயரிய பதவிக்கு நான் வந்ததற்கு எனது கடின உழைப்பு, ஒரே மனநிலை கொண்ட அர்ப்பணிப்பு உணர்வு, தொடர் பயணம், மக்களுடன் உரையாடல் ஆகியவைதான் காரணங்கள் என்று அவர் பேசினார்.


Next Story