எலிகளிடம் சிக்கிய தங்க நகைகள்; சி.சி.டி.வி. கேமிரா உதவியுடன் மீட்ட போலீசார்


எலிகளிடம் சிக்கிய தங்க நகைகள்; சி.சி.டி.வி. கேமிரா உதவியுடன் மீட்ட போலீசார்
x

மராட்டியத்தில் எலிகளிடம் சிக்கிய 100 கிராம் தங்க நகைகளை போலீசார் சி.சி.டி.வி. கேமிரா உதவியுடன் மீட்டுள்ளனர்.



புனே,



மராட்டியத்தின் மும்பை நகர் அருகே கோகுல்தம் காலனி பகுதியில் சுந்தரி என்ற பெண் தனது தங்க நகைகளை மகள் திருமணத்திற்காக வங்கியில் அடகு வைக்க சென்றுள்ளார். அவர் செல்லும் வழியில் குழந்தைகளை வைத்து கொண்டு பெண் ஒருவர் பிச்சை எடுத்து கொண்டு இருந்துள்ளார்.

இதனை கவனித்த சுந்தரி, தனது கையில் உள்ள தங்க நகைகளை பிரெட் என நினைத்து கொடுத்து விட்டு சென்றுள்ளார். ஆனால், அந்த பெண் அதனை குப்பை தொட்டியில் போட்டு விட்டு சென்று விட்டார்.

வழக்கம்போல் குப்பை தொட்டிக்கு வந்த சில எலிகள் சாப்பிட ஏதும் கிடைக்குமா? என அலசி பார்த்து உள்ளது. இதில் தங்க நகைகள் இருந்த பொட்டலம் ஒன்றை தூக்கி கொண்டு சாலையோர கால்வாய் பகுதிக்கு சென்றுள்ளது.

ஆனால், சுந்தரி தனது நகையை காணவில்லை என தேடும்போது, அதனை பிச்சை எடுத்த பெண்ணிடம் கொடுத்த ஞாபகம் வந்துள்ளது. உடனடியாக அந்த பகுதிக்கு சென்று தேடி பார்த்துள்ளார். ஆனால், அவரை காணவில்லை.

இதனையடுத்து, போலீசாரிடம் சுந்தரி புகார் அளித்து உள்ளார். இதுபற்றி மும்பை போலீசின் துணை காவல் ஆய்வாளர் சந்திரகாந்த் கார்கே கூறும்போது, சுராஜ் ராவத் தலைமையிலான போலீசார் குழு அந்த பகுதி சி.சி.டி.வி. காட்சிகள் உதவியுடன் விசாரணை நடத்தினர். அதில் பிச்சை எடுத்த பெண்ணை கண்டறிந்து, அவரிடம் விசாரித்தபோது, பிரெட் காய்ந்து போய் இருந்தது. அதனை குப்பை தொட்டியில் வீசி விட்டேன் என அவர் கூறியுள்ளார்.

இதனால், போலீசார் குப்பை தொட்டியில் அலசி ஆராய்ந்து உள்ளனர். பின்னர் சி.சி.டி.வி. கேமிராவையும் பார்த்ததில், எலிகள் தங்க நகைகளுடன் இருந்த பிரெட்டை தூக்கி சென்று சாப்பிட்டு கொண்டு இருந்துள்ளது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, அந்த தங்க நகைகளை போலீசார் மீட்டு கொண்டு வந்தனர்.


Next Story