அரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் சாவு
பண்ட்வால் அருகே அரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதலில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
மங்களூரு-
தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா சரபாடியை சேர்ந்தவர் சேசப்பா என்ற ஸ்ரேயாஸ் (வயது27). இவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் சேசப்பா வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். மோட்டார் சைக்கிள் பி.சி. ரோட்டில் சென்று கொண்டு இருந்தது.
அப்போது தர்மஸ்தலா நோக்கி வேகமாக வந்த அரசு பஸ், சேசப்பா ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சேசப்பா படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பண்ட்வால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மங்களூரு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சேசப்பா ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பண்ட்வால் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.