கிராமங்கள் தோறும், அரசின் வளர்ச்சி திட்டங்கள்-ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், பிரதமர் அறிவுரை


கிராமங்கள் தோறும், அரசின் வளர்ச்சி திட்டங்கள்-ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், பிரதமர் அறிவுரை
x

கிராமங்கள் தோறும், அரசின் வளர்ச்சி திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்று ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பா.ஜனதா தலைவர்களிடம் பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார்.

மங்களூரு: கிராமங்கள் தோறும், அரசின் வளர்ச்சி திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்று ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பா.ஜனதா தலைவர்களிடம் பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார்.

மங்களூருவில் நடைபெற்றது

கர்நாடக பா.ஜனதா கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா உள்பட அந்த குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மங்களூருவில் பிரதமர் மோடி கலந்து கொண்ட விழா வெற்றிகரமாக அமைந்தது. மேலும் அவர் எங்கள் கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் கலந்து கொண்டார். பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மத்தியிலும் நேரம் ஒதுக்கி கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்டதற்காக அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

8 பொது கூட்டங்கள்...

கர்நாடகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுவது குறித்து விவரங்களை பிரதமர் மோடி கேட்டு பெற்றார்.பின்னர் அவர் மத்திய, மாநில அரசுகளின் வளர்ச்சி திட்டங்கள் கிராமங்கள் தோறும் உள்ள மக்களையும் சென்றடையும் வண்ணம் செயல்பட வேண்டும் என்றார். மேலும் வரும் நாட்களில் இதுபோல் 8 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்தவும் ஏற்பாடு செய்வோம் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து கட்சியை பலப்படுத்துவது குறித்தும் மோடி சில ஆலோசனைகளை வழங்கினார். பிரதமர் மோடி அடிக்கடி கர்நாடகத்திற்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story