கர்நாடகத்தில் அரசு ஊழியர்கள் 1-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்
கர்நாடகத்தில் 7-வது ஊதிய குழுவின் இடைக்கால அறிக்கையை பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் வருகிற 1-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
பெங்களூரு-
7-வது ஊதிய குழு
கர்நாடக அரசு துறைகளில் சுமார் 9 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்களின் சம்பள விகிதத்தை மாற்றி அமைக்க 7-வது ஊதிய குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. இந்த குழுவின் இடைக்கால அறிக்கையை இந்த மாத இறுதிக்குள் பெற வேண்டும் என்று வலியுறுத்தி கர்நாடக அரசு ஊழியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகிறார்கள். இதுகுறித்து ஊதிய குழுவின் அறிக்கை பெறப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
இந்த நிலையில் மாநில அரசு ஊதிய குழுவின் இடைக்கால அறிக்கையை இந்த மாத இறுதிக்குள் பெறாவிட்டால் வருகிற 1-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் ஷடக்சரி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
7-வது ஊதிய குழுவை அரசு அமைத்துள்ளது. இந்த குழுவின் இடைக்கால அறிக்கையை பெற்று அதன்படி சம்பள விகிதத்தை மாற்றி அமைக்குமாறு நாங்கள் ஏற்கனவே அரசிடம் கூறியுள்ளோம். இந்த மாத இறுதிக்குள் இந்த அறிக்கையை பெற வேண்டும் என்று சொன்னோம். ஆனால் அரசு இதுவரை அந்த அறிக்கையை பெறவில்லை. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த, அரசு உயர் அதிகாரிகள் நாளை (இன்று) எங்களை அழைத்துள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் நாங்கள் கலந்து கொள்வோம்.
ஆனால் எங்களின் கோரிக்கையில் நாங்கள் உறுதியாக உள்ளோம். 7-வது ஊதிய குழு இடைக்கால அறிக்கையை பெற வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும். மத்திய அரசுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கூறியுள்ளோம்.
9 லட்சம் பேர்
7-வது ஊதிய குழுவின் இடைக்கால அறிக்கையை பெறாவிட்டால் வருகிற 1-ந் தேதி முதல் திட்டமிட்டபடி அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள். இதில் பள்ளி ஆசிரியர்கள் உள்பட 9 லட்சம் ஊழியர்களும் ஈடுபடுவார்கள். இவ்வாறு ஷடக்சரி கூறினார்.