உத்தரகன்னடாவில் அரசு உயர் பன்னோக்கு ஆஸ்பத்திரி சட்டசபையில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் திட்டவட்டம்


உத்தரகன்னடாவில் அரசு உயர் பன்னோக்கு ஆஸ்பத்திரி  சட்டசபையில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் திட்டவட்டம்
x
தினத்தந்தி 23 Sept 2022 12:15 AM IST (Updated: 23 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

உத்தரகன்னடாவில் அரசு உயர் பன்னோக்கு ஆஸ்பத்திரி அமைக்கப்படும் என்று சட்டசபையில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபையில் நேற்று உத்தரகன்னடா மாவட்டத்தை சேர்ந்த பா.ஜனதா உறுப்பினர்கள் ரூபாலிநாயக், சுனில், தினகர்ஷெட்டி ஆகியோர், அரசு உயர் பன்னோக்கு ஆஸ்பத்திரி குறித்து அரசின் நிலைப்பாட்டை தெளிவாக அறிவிக்க வேண்டும் என்று கோரினர். அதற்கு சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பதிலளிக்கையில் கூறியதாவது:-

உத்தர கன்னடா மாவட்டத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுடன் நான் ஆலோசனை கூட்டம் நடத்தினேன். அதில் உத்தரகன்னடாவில் அரசு உயர் பன்னோக்கு ஆஸ்பத்திரி அமைக்க முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளார் என்பதை கூறினேன். எந்த பகுதியில் ஆஸ்பத்திரி அமைப்பது என்பது ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். கூட்டத்தொடர் முடிவடைந்ததும் உத்தரகன்னடாவுக்கு நேரில் வந்து ஆய்வு செய்வேன். கார்வாரில் மருத்துவ கல்லூரி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிர்சியில் 250 படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரி அமைக்கப்படுகிறது. உயர் பன்னோக்கு ஆஸ்பத்திரி அமைப்பது குறித்து அரசு தனது முடிவை கூறியுள்ளது. இதை விட இன்னும் தெளிவான முடிவை அறிவிக்க வேண்டும் என்று கேட்பது சரியல்ல. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெளிவாக தான் கூறியுள்ளார். இதை உறுப்பினர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு சுதாகர் கூறினார்.


Next Story