கர்நாடகத்தில் 10,889 மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்த அரசு அனுமதி


கர்நாடகத்தில் 10,889 மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்த அரசு அனுமதி
x
தினத்தந்தி 22 Oct 2022 6:45 PM GMT (Updated: 22 Oct 2022 6:46 PM GMT)

கர்நாடகத்தில் 10 ஆயிரத்து 889 மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டு உள்ளது.

பெங்களூரு:

ஒலிபெருக்கி பயன்படுத்த தடை

கர்நாடகத்தில் மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகள் அதிக சத்தம் எழுப்பும் வகையில் உள்ளதாகவும், அந்த ஒலிபெருக்கிகளால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் கூறி இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மேலும் மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை அகற்ற அரசு உத்தரவிட வேண்டும் என்று இந்து அமைப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கோவில்களில் அனுமன் பாடல்களை ஒலிபரப்புவதன் மூலம் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர். இதனால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்க வழிபாட்டு தலங்களில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கியை பயன்படுத்த அரசு தடை விதித்து இருந்தது.

யாருக்கும் பிரச்சினை இல்லை

ஆனாலும் ஒலிபெருக்கியை பயன்படுத்த நினைப்பவர்கள் அரசிடம் இருந்து எழுத்துபூர்வ அனுமதியை பெற வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் மசூதிகளில் ஒலிபெருக்கியை பயன்படுத்த அனுமதி கேட்டு அரசுக்கு 17 ஆயிரத்து 850 விண்ணப்பங்கள் வந்தன. அந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்த அரசு 10 ஆயிரத்து 889 மசூதிகளில் ஒலிபெருக்கியை பயன்படுத்த அனுமதி அளித்து உள்ளது. அடுத்த 2 ஆண்டுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக பெங்களூருவில் 1,841 மசூதிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சி.டி.ரவி எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறுகையில், 'மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்த அரசு அனுமதி வழங்கி உள்ளது. இது ஒலிபெருக்கிக்கு எதிரான போராட்டத்திற்கு கிடைத்த தோல்வி இல்லை. நாங்கள் விதிகளை பின்பற்ற வேண்டும் என்று தான் கூறுகிறோம். நிர்ணயிக்கப்பட்ட டெசிபல் அளவு ஒலியை பயன்படுத்தினால் யாருக்கும பிரச்சினை இல்லை' என்றார்.


Next Story