புற்றுநோய் மருந்துகள் உட்பட 384 அத்தியாவசிய மருந்துகளின் பட்டியல் வெளியீடு!
அத்தியாவசிய மருந்துகளின் தேசிய பட்டியல்களை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று வெளியிட்டார்.
புதுடெல்லி,
அத்தியாவசிய மருந்துகளின் தேசிய பட்டியல்களை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று வெளியிட்டார்.
அனைத்து மட்டங்களிலும் கட்டுப்படியான விலையில் தரமான மருந்துகள் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், அத்தியாவசிய மருந்துகளின் தேசிய பட்டியல் முக்கிய பங்காற்றி வருகிறது.
அத்தியாவசிய மருந்துகளின் இந்த பட்டியல் 1996ம் ஆண்டு முதல் முதலாக வகுக்கப்பட்டது. அதன் பின்னர் 2003, 2011, 2015 ஆகிய ஆண்டுகளில் இதற்கு முன்பு 3 முறை திருத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) கீழ், ஒரு நிபுணர் குழுவால் 399 மருந்துகளின் திருத்தப்பட்ட பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டது.
புதிய பட்டியலில் கூடுதலாக 34 மருந்துகளுடன் 384 மருந்துகள் இடம் பெற்றுள்ளன. முந்தைய பட்டியலில் இருந்து 26 மருந்துகள் நீக்கப்பட்டுள்ளன. 27 சிகிச்சைப் பிரிவுகளுக்கென இந்த மருந்துகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
ரானிடிடின், சுக்ரால்ஃபேட், ஒயிட் பெட்ரோலாட்டம், அட்டெனோலோல் மற்றும் மெத்தில்டோபா போன்ற மருந்துகள் நீக்கப்பட்டுள்ளன.
இந்தப் பட்டியலில் கூடுதலாக ஐவர்மெக்டின், முபிரோசின், மெரோபெனெம், ஹார்மோன்கள், பிற நாளமில்லா சுரப்பி சிகிச்சைகளுக்கான மருந்துகள், கருத்தடை மருந்துகள், சுவாசக் குழாயில் செயல்படும் மருந்து மாண்டெலுகாஸ்ட், கண் மருத்துவ மருந்து லட்டானோப்ரோஸ்ட், இருதய மருந்துகள் டபிகாட்ரான் மற்றும் டெனெக்டெப்ளேஸ் ஆகியவை கூடுதலாக இடம் பெற்றுள்ளன.
புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகள் பெண்டாமுஸ்டைன் ஹைட்ரோகுளோரைடு, எச்சிஐ டிரைஹைட்ரேட், லெனலிடோமைடு மற்றும் லியூப்ரோலைடு அசிடேட் ஆகியவை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
மருந்துகள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்புத் தயாரிப்புக்கான நிலையான தேசியக் குழுவின் துணைத் தலைவர் கூறுகையில், புற்றுநோய் சிகிச்சைக்கான இந்த மருந்துகள் பல்வேறு வகையான புற்றுநோய்களில் பயனுள்ளதாக இருக்கும், மேலும் இவை மலிவு விலையிலும் உள்ளன.
வர்த்தகத்தை பகுப்பாய்வு செய்வதிலும் அரசு செயல்பட்டு வருகிறது. இதனால் பொதுவான புற்றுநோய்க்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் மலிவு விலையில் வரலாம் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய சுகாதாரத்துறை மந்திரி, "செயல்திறன், முன்னுரிமை, தரம், விலை ஆகியவற்றின் அடிப்படையில் அத்தியாவசிய மருந்துகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அம்சங்களின் அடிப்படையில் மருந்துகளை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதே தேசிய பட்டியலின் நோக்கமாகும்.
அனைவருக்கும் மலிவான விலையில் மருந்து என்ற தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகளை வழங்க இது வகைசெய்கிறது" என்று அவர் கூறினார்.