6-ம் வகுப்பு மாணவனை அடித்து துன்புறுத்திய அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பணி இடைநீக்கம்
கொப்பாவில் 6-ம் வகுப்பு மாணவனை அடித்து துன்புறுத்திய அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்து கல்வித்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
சிக்கமகளூரு;
சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகா பண்டிகடி எனும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக நாகராஜ் என்பவர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் ஆசிரியர் நாகராஜ், பள்ளியில் படிக்கும் 6-ம் வகுப்பு மாணவனை வீட்டுப்பாடம் எழுதிவிட்டு வராததாக தடியால் அடித்து துன்புறுத்தியுள்ளார்.
இதில் மாணவனுக்கு முதுகு, கை உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி மாணவன், பெற்றோரிடம் கூறியுள்ளான். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், அப்பகுதி மக்களுடன் அரசு பள்ளிக்கு சென்று உடற்கல்வி ஆசிரியர் நாகராஜ் மற்றும் தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் உடற்கல்வி ஆசிரியர் நாகராஜ் மீது நடவடிக்கை எடுக்கும்படி கொப்பா தாலுகா கல்வித்துறை அதிகாரியிடம் புகார் அளித்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கல்வித்துறை அதிகாரி அந்தோணிராஜ் விசாரணை நடத்தினார். அதில் உடற்கல்வி ஆசிரியர் நாகராஜ், மாணவனை சரமாரியாக தடியால் அடித்தது உறுதியானது. இதையடுத்து கல்வித்துறை அதிகாரி அந்தோணிராஜ், உடற்கல்வி ஆசிரியர் நாகராஜை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.