கவர்னர்-பா.ஜ.க. கூட்டு; நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டவிரோதம்: சஞ்சய் ராவத் கொந்தளிப்பு
பா.ஜ.க. மற்றும் மராட்டிய கவர்னர் இந்திய அரசியல் சாசனத்துடன் விளையாடுகின்றனர் என சஞ்சய் ராவத் எம்.பி. அதிரடி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
புனே,
மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான மகா விகாஸ் அகாடியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 20ந்தேதி இரவில் சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒன்று திரண்டு அசாம் மாநிலம் கவுகாத்திக்கு புறப்பட்டு சென்றனர்.
அவர்கள் புளூ ரேடிசன் என்ற ஆடம்பர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுடன் 10 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். இதனால் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அரசு எந்த நேரத்திலும் கவிழ கூடிய வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
இதற்கு மத்தியில் உத்தவ் தாக்கரே அரசை கவிழ்த்து விட்டு ஆட்சியமைக்கும் முனைப்பில் பா.ஜ.க. நேற்று வெளிப்படையாக களத்தில் இறங்கியது. அக்கட்சியின் முன்னாள் முதல்-மந்திரியான தேவேந்திர பட்னாவிஸ் அவசர அவசரமாக டெல்லி புறப்பட்டார். அவர் மாலையில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா வீட்டுக்கு சென்று அவருடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் விமானம் மூலம் மும்பை திரும்பிய தேவேந்திர பட்னாவிஸ் இரவு 9.30 மணியளவில் ராஜ்பவன் சென்றார். அவருடன் மாநில கட்சி தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் உடன் இருந்தார். அப்போது, உத்தவ் தாக்கரே அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் கவர்னரை கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.
கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வந்த கவர்னர் கோஷ்யாரி சமீபத்தில் மருத்துவமனையில் இருந்து திரும்பினார் என்பது கவனிக்கத்தக்கது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பட்னாவிஸ், சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தவ் தாக்கரேக்கு உத்தரவிட கவர்னரை கோரி உள்ளோம். இது தொடர்பாக கடிதமும் கொடுத்துள்ளோம். கவர்னர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்றார். மெஜாரிட்டியை நிரூபிக்கும்படி நான் உத்தரவிடவில்லை என கவர்னர் நேற்று முதலில் கூறினார்.
ஆனால் இன்று, மராட்டிய சட்டசபை சபாநாயகர் நாளை அவையை கூட்டி, வாக்கெடுப்பு நடத்தி, மாலை 5 மணிக்குள் சிவசேனா அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார்.
மும்பையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் அதற்கான நடைமுறைகளை பின்பற்றி நடப்பேன் என்றும் ஷிண்டே இன்று கவுகாத்தியில் கூறியுள்ளார்.
இதற்காக, அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் இன்று கவுகாத்தியில் இருந்து புறப்பட்டு கோவாவுக்கு பயணம் மேற்கொள்கின்றனர். இதற்காக கோவாவில், தாஜ் ரிசார்ட்டில் அவர்களுக்கு 70 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இதன்பின்னர் மும்பை நகருக்கு நாளை புறப்பட்டு செல்லும் அவர்கள் அங்கிருந்தபடியே, மராட்டிய சட்டசபைக்கு நேரடியாக செல்கின்றனர். மக்கள் எங்களுடனேயே உள்ளனர். நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் வெற்றி பெறுவோம் என ஷிண்டே அணி தெரிவித்து உள்ளது.
இதுபற்றி சிவசேனாவின் எம்.பி. சஞ்சய் ராவத் கூறும்போது, இது சட்ட விரோதம். 16 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் பற்றிய வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டின் முன் விசாரிக்கப்பட உள்ளது. இந்த சூழலில் எப்படி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளாக எங்களுடைய கோப்புகள் கவர்னர் கோஷ்யாரி முன் கவனிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன. அதன் மீது ஒரு நடவடிக்கை கூட அவர் எடுக்கவில்லை. ஆனால் இந்த விவகாரத்தில், ரஃபேல் ஜெட் விமானங்களை விட விரைவாக செயலாற்றுகிறார் என கூறியுள்ளார்.
ராவத் தொடர்ந்து, பா.ஜ.க. மற்றும் கவர்னர் ஆகியோர் இந்திய அரசியல் சாசனத்துடன் விளையாடுகின்றனர் என அதிரடி குற்றச்சாட்டையும் முன்வைத்து உள்ளார்.