புதிய வகை கொரோனா குறித்து இந்தியா கவலைப்பட தேவை இல்லை; மருத்துவ விஞ்ஞானி உறுதி


புதிய வகை கொரோனா குறித்து இந்தியா கவலைப்பட தேவை இல்லை; மருத்துவ விஞ்ஞானி உறுதி
x
தினத்தந்தி 24 Dec 2022 6:28 AM IST (Updated: 24 Dec 2022 7:40 AM IST)
t-max-icont-min-icon

உலக நாடுகளை மிரட்டும் புதிய வகை கொரோனா குறித்து இந்தியா கவலை கொள்ள தேவை இல்லை என பிரபல மருத்துவ விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளார்.

ஐதராபாத்,

கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் தற்போது 'பிஎப்.7' எனப்படும் புதிய வகை உருமாறிய கொரோனா மக்களை ஆட்டிப்படைக்கிறது. சீனாவில் பெரும் அச்சுறுத்தலாக உருவாகி இருக்கும் இந்த வகை கொரோனா அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பிற நாடுகளிலும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இந்த பிஎப்.7 கொரோனா இந்தியாவிலும் கண்டறியப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக குஜராத், ஒடிசா மாநிலங்களில் இந்த தொற்றின் இருப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.எனவே இதை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டு வருகின்றன. குறிப்பாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் உயர்மட்ட ஆலோசனை நடத்தி தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளார்.

ஆனால் இந்த கொரோனா குறித்து இந்தியா அதிகம் கவலை கொள்ளத்தேவை இல்லை என புகழ்பெற்ற மருத்துவ விஞ்ஞானியும், பெங்களூரு டாடா மரபணு இன்ஸ்டியூட் நிறுவன இயக்குனருமான ராகேஷ் மிஸ்ரா கூறியுள்ளார்.இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:- இந்த புதிய வைரஸ், ஒமைக்ரானின் ஒரு துணை மாறுபாடு ஆகும். சில சிறிய மாற்றங்களைத் தவிர முக்கிய அம்சங்கள் அனைத்தும் ஒமைக்ரான் போன்று இருக்கும், பெரிய வித்தியாசம் இல்லை. நம்மில் பெரும்பாலானோர் ஒமைக்ரான் அலையை கடந்து வந்திருக்கிறோம். அடிப்படையில் இதுவும் அதே வைரஸ்தான். எனவே இந்த புதிய வைரஸ் குறித்து நாம் கவலைப்பட வேண்டியதில்லை.

சீன மக்கள் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள். அங்கு வயதானவர்களுக்கு தடுப்பூசி போட அவர்கள் நேரத்தை பயன்படுத்தவில்லை. அதனால் அவர்களின் அறிகுறிகள் கடுமையானவை.இளைஞர்களுக்கு இன்னும் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் தடுப்பூசி போடாத முதியவர்களிடையே இது மிக வேகமாக பரவி வருகிறது.அதேநேரம் இந்தியாவில் பெரும்பாலான இந்தியர்கள் இருவகையான நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்றுள்ளனர். அதாவது தடுப்பூசிகள் மூலம் உருவாக்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் கொரோனா உள்ளிட்ட பல்வேறு தொற்றுகளிலிருந்து பாதுகாக்கும் இயற்கை சக்தி.

இந்தியாவில் தற்போதுள்ள தடுப்பூசிகள் பல்வேறு ஒமைக்ரான் மாறுபாடுகளைத் தடுக்க அல்லது கட்டுப்படுத்த சிறந்தவை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிலவிய ஒமைக்ரானின் பெரிய அலையில் கூட தொற்று ஏற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கும் அளவுக்கு சிரமத்தை அனுபவிக்கவில்லை.எனவே இந்த வைரஸ் பாதிப்பு குறித்து இந்தியா அதிகம் கவலை கொள்ள தேவை இல்லை. அதேநேரம் மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளுக்கு செல்வதை தவிர்ப்பதும், முககவசம் அணிவதும் எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது.இவ்வாறு ராகேஷ் மிஸ்ரா கூறினார்.


Next Story